/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை ஏறிய எலுமிச்சை
/
வரத்து குறைவால் விலை ஏறிய எலுமிச்சை
ADDED : மே 13, 2024 06:05 AM

திண்டுக்கல்: வெயிலின் தாக்கத்தால் திண்டுக்கல்லில் எலுமிச்சை வரத்து குறைந்து 50கிலோ எடை கொண்ட மூடை ரூ.8000க்கு விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு தாண்டிக்குடி,மலை அடிவார கிராமங்களில் அதிகளவில் எலுமிச்சை விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் எலுமிச்சைகள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிறுமலை பழ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மத்தியில் ஏலம் விடப்படுகிறது.மணப்பாறை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறு நாயக்கன்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, தவசிமடை பகுதிகளிலிருந்து எலுமிச்சைகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது சீசன் என்பதால் அதிக அளவில் எலுமிச்சம் பழம் விற்பனைக்கு வர வேண்டும். இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் எலுமிச்சை மரத்தில் பூ,பிஞ்சு உதிர்ந்து விட்டது. தினமும் 20 டன் வர வேண்டிய நிலையில் 2 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே வருகிறது. இதனால் 50 கிலோ மூடை ரூ.8000 க்கு விற்பனையானது. 2 மாதத்திற்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.