/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ. 50 லட்சம் மோசடி போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்
/
ரூ. 50 லட்சம் மோசடி போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 20, 2024 04:48 AM
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் ஜி. தும்மலப்பட்டி அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜி.தும்மலப்பட்டி கிளை அஞ்சலக போஸ்ட் மாஸ்டராக அதே ஊரை சேர்ந்த முனியாண்டி 55, பணியாற்றினார். இங்கு மேட்டூர், தும்மலப்பட்டி, ஊத்தங்கல் புதுப்பட்டி, அண்ணா நகர் சீரங்கன் நகர் கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். செல்வமகள் சேமிப்பு, நிரந்தர வைப்பு கணக்கு, மாதந்தோறும் வருவாய் திட்டங்கள் போன்றவற்றில் பணம் செலுத்தி வந்தனர்.
ஆக. 14 ல் தனது கணக்கில் இருந்த ரூ. 2 லட்சத்தை எடுக்க சென்ற சிவா என்பவருக்கு ஒரு லட்சத்தை கொடுத்து விட்டு பாக்கி பணத்தை பிறகு தருவதாக முனியாண்டி கூறி உள்ளார். சந்தேகமடைந்த சிவா திண்டுக்கல் கோட்ட அலுவலகத்தில் புகார் செய்தார்.
கொடைக்கானல் உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாண்டியராஜன் ஆவணங்களை ஆய்வு செய்தார். மேட்டூரை சேர்ந்த நான்கு பெண்களின் பாஸ்புக்கை ஆய்வு செய்தபோது அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் போலி என தெரிந்தது. இவ்வாறு ரூ. 50 லட்சம் வரை மோசடி நடந்திருக்கலாம் என்பதால் முனியாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

