/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மணல் திருட்டு அதிகம்; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
/
மணல் திருட்டு அதிகம்; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
மணல் திருட்டு அதிகம்; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
மணல் திருட்டு அதிகம்; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
ADDED : மார் 01, 2025 04:05 AM
திண்டுக்கல் : ''மாவட்டத்தில் அதிகளவில் நடக்கும் மணல் திருட்டுகளை தடுக்க வேண்டும்''என விவசாயிகள் புகார் கூறினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், கால்நடை பராமரிப்புத்துறை ராஜா, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி, வேளாண் துணை இயக்குநர் உமா, கலெக்டர் நேர்முக உதவியாளர் லீலாவதி முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்...
கலெக்டர்: என் அப்பா, அம்மா விவசாயம் தான் செய்கின்றனர். விவசாயத்தோடு எனக்கு நெருங்கிய உறவு உள்ளது. தனிப்பட்ட குறைகள் இருந்தாலும் அதை தெரிவிக்கலாம். விவசாயம் சார்ந்த குறைகளுக்கு இந்த கூட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்போது தான் பிரச்னைகளை சரி செய்ய முடியும். இல்லையென்றால் விவசாய பிரச்னைகளை கவனிக்க இயலாமல் போய்விடும்.
சவடமுத்து,நாகையகோட்டை: கல்லுக்குளம் பகுதியில் 7ஆண்டாக ஆக்கிரமிப்புகள் உள்ளது. இன்னும் அதை அகற்றவில்லை. நானும் பல மனுக்களை கொடுத்துவிட்டேன். இதுவரை நடவடிக்கை இல்லை.
கலெக்டர்: ஆய்வு செய்யப்படும்.
முத்துசாமி, வேடசந்துார்: ஆறுகோம்பை பகுதியில் அனைத்து விவசாய நிலங்களும் வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ளது. இதனால் வனவிலங்குகள் எளிதில் வந்து விவசாய பயிர்களை அழிக்கின்றன. தண்ணீர் தேடி வரும் விலங்குகள் பயிர்களை சேதம்செய்வதால் விவசாயிகள் தான் நஷ்டம் அடைகிறோம்.
கலெக்டர்: தண்ணீர் தொட்டி அமைக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரப்பன், குஜிலியம்பாறை: காவிரியிலிருந்து கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை குஜிலியம்பாறை பகுதி கண்மாய்களுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் விவசாயம் செழிப்படையும்.
ரங்கமணி, குஜிலியம்பாறை: அய்யலுார் பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கடலை பயிர்களை காட்டு பன்றிகள் சீரழிக்கிறது. வனத்துறை சார்பில் முள் வேலிகள் அமைக்க வேண்டும்.
ராஜேந்தின், விளாம்பட்டி: நிலக்கோட்டை பகுதியில் நெல் விவசாயத்தில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபடுகிறோம். வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறுகிறோம். இதுதவிர எலிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எலிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியசாமி, வேடசந்துார்: வேடசந்துாரில் கால்நடை மருத்துவமனை சேதமான நிலையில் உள்ளது.
வி,புதுக்கோட்டை சேத்தம்பட்டி பகுதியில் ரோடு அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துள்ளேன்.
இதுவரை நடக்கவில்லை. சடையாண்டி குளத்தில் கழிவு மணல்களை கொட்டுகின்றனர். இதனால் குளத்திற்கு அருகில் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள் பாதிக்கின்றன.
கலெக்டர்: விவசாயிகள் கோரிக்கைகளே 5 நிமிடத்திற்கு மேல் கூறுகிறீர்கள். கலெக்டரை மட்டும் உடனடியாக செய்ய சொல்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் அவைகளை அகற்றப்படும்.
ராமசாமி, வேடசந்துார்: மணல் திருட்டுகள் அதிகளவில் நடக்கின்றன. இதை அதிகாரிகள் கவனம் செலுத்தி தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.