/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாக்டர்கள் பற்றாக்குறை; இல்லவே இல்லை பெண் டாக்டர்
/
டாக்டர்கள் பற்றாக்குறை; இல்லவே இல்லை பெண் டாக்டர்
ADDED : செப் 06, 2024 05:30 AM

நத்தம்: நத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்காக வருபவர்கள் கடும் பாதிப்பு சந்திப்பதோடு, பிரசவம் பார்க்க பெண் டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் திண்டுக்கல்லுக்கு அலைக்கழிக்கப்படுவதும் தொடர்கிறது .
நத்தம் ஒன்றிய பகுதியில் 200க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பெண்கள்,முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என எந்த பாதிப்பு என்றாலும் அந்தப்பகுதி உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு மேல் சிகிச்சைக்கு நத்தம் அரசு மருத்துவமனை வரும் சூழல் உள்ளது.
நத்தம் அரசு மருத்துவமனையில் காலையில் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வருபவர்கள் 650, மதிய வேலைகளில் 150 , இரவு நேரங்களில் 100 பேர் என தினமும் 900 பேர் வரை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாதாந்திர சிகிச்சைக்காக கர்ப்பிணிகளும் அதிகம் வருகின்றனர். நத்தம் அரசு மருத்துவமனையிலோ அடிப்படை வசதிகள் அறவே இல்லை. இதோடு கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க பெண் டாக்டர்கள் கூட இல்லை. இவர்கள் திண்டுக்கல்லுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைக்காக வரும் நத்தம் அரசு மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் வரை பணியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு தலைமை மருத்துவரையும் சேர்த்து நான்கு பேர் மட்டுமே உள்ளனர். எலும்பு முறிவு மருத்துவர், மயக்க மருந்து மருத்துவர், அறுவைச் சிகிச்சை மருத்துவர், மகப்பேறு பெண் மருத்துவர், பல் மருத்துவர், பொதுநல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் பணியிடம் தற்போது வரை காலியாக உள்ளது. இதனால் பல், எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் திண்டுக்கல் , மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்யும் வசதி மட்டுமே உள்ளது. எலும்பு முறிவு போன்ற பொது மருத்துவத்திற்கு ஸ்கேன் செய்யும் இயந்திரம் இங்கு இல்லை. செயல்பட்டு வரும் எக்ஸ்ரே அறை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. போதுமான மருத்துவர்கள் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் அவதி
வி.எம்.பூமிஅம்பலம், மாநில மாணவரணி செயலாளர், தமிழர் தேசம் கட்சி,நத்தம்: நத்தம் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அவதியுறுகின்றனர் . இதில் உரிய கவனம் செலுத்தி வருமுன் காப்போம் என்ற உயரிய எண்ணத்தில் பெண் மருத்துவர்கள் பிரசவ வார்டிற்கு நியமிக்க வேண்டும்.
போதிய படுக்கைகளும் இல்லை
சிவசங்கரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர், நாம் தமிழர் கட்சி : போதுமான அரசு மருத்துவர்கள் இல்லாமல் பெயரளவில் மருத்துவமனை செயல்படுகிறது. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். படுக்கைகள் 56 மட்டுமே உள்ள நிலையில் உள்நோயாளிகளாக 62 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளாகத்தில் மாடுகள்
சத்யா பொன்னழகன், சமூக ஆர்வலர் : மருத்துவமனை வளாகத்திற்குள் எப்போதும் மாடுகள் சுற்றி திரிகின்றன. இவைகளால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது. மருத்துவமனை கட்டடங்கள் பல இடங்களில் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.