/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்வியோடு விளையாட்டு, கலைகளுக்கும் ஊக்கம்
/
கல்வியோடு விளையாட்டு, கலைகளுக்கும் ஊக்கம்
ADDED : ஆக 18, 2024 05:17 AM

திண்டுக்கல்
படிப்பிலே முழு கவனத்தை செலுத்தும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. விளையாட்டு ,கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் விழா மேடையில் கவுரவிக்கப்படும்போது பெற்றோர்கள் அளவில்லா மகிழ்ச்சியடைகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இங்கு நடந்த 99 வது பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள்,ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள் மனம் திறந்ததாவது...
உலக அறிவு தேவை
சண்முகசுந்தரம்,அமிர்தா குழும பேராசிரியர், கொச்சின், கேரளா: இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு. இந்த நேரத்திலே என் ஆசிரியர்கள்,பெற்றோருக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். நான் 1979ல் 8ம் வகுப்பில் மாணவனாக சேர்ந்தேன். வாய்ப்புகள் தான் நம்மை சிறந்த மனிதனாக உருவாக்கும். ஒருவர் பெரிய ஆளாக மாற வேண்டும் என்றால் படிக்கின்ற காலத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் உலக அறிவுகளை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
தன்னம்பிக்கை பயிற்சி
ஆரோக்கியதாஸ்,தலைமை ஆசிரியர், புனித மரியன்னை பள்ளி, திண்டுக்கல்: உண்மை உணர்தல் என்பது தான் எங்கள் பள்ளியின் நோக்கமே. மாணவர்களுக்கும் இதை தான் நாங்கள் கற்றுகொடுக்கிறோம். இதுதவிர கல்வி,விளையாட்டு,கலை உள்ளிட்டவைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகிறோம். இதனால் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் அதிக வெற்றிகளை குவிக்கின்றனர். விளையாட்டு போட்டிகளில் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களையும் வழங்குகிறோம். இதுதவிர தன்னம்பிக்கை பயிற்சிகளையும் கொடுக்கிறோம்.
ஒழுக்கத்தில் சிறப்பு
காஜாமைதீன், சமூக ஆர்வலர், திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 99 ஆண்டுகளாக பல சிறந்த மனிதர்களை இப்பள்ளி உருவாக்கி உள்ளது. இங்கு படித்த பலரும் தற்போது உலகின் பல்வேறு பெரிய பணிகளில் உள்ளனர். ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்வது தான் இந்த பள்ளியின் சிறப்பு. இது தவிர மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
மாணவர்கள் விரும்பும் விழா
சாம் கிளாடின், 12ம் வகுப்பு மாணவர்,திண்டுக்கல்: பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் மாவட்ட அளவில் நடக்கும் ஒட்டப்பந்தைய போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளேன். வருடா வருடம் எல்லா மாணவர்களையும் சிறப்பிக்கும் வகையில் ஆண்டு விழா நடத்தி அதில் பரிசு தருவது வரவேற்க தக்க செயலாக உள்ளது. மாணவர்கள் கவனம் தவறான திசையில் செல்லாமல் தடுக்க பள்ளி ஆசிரியர்கள் அடிக்கடி விளையாட்டு,கலை நிகழ்ச்சிகளை நடத்தி நல்வழிப்படுத்துகின்றனர்.
மகிழ்ச்சியாக உள்ளது
அந்தோணி ரித்திஷ், 11ம் வகுப்பு மாணவர், திண்டுக்கல்: ஆண்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தேன். நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் 97 மதிப்பெண் பெற்றதற்காக அனைவரின் முன்னிலையிலும் எனக்கு பரிசு தந்தார்கள். என்னை இன்னும் ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து எங்கள் பள்ளி இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்கி கொண்டு இருக்கிறது. நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.