ADDED : ஜூலை 19, 2026 06:12 PM
பழநி: பழநியில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் தெய்வ பிரகாஷ் தலைமை வகித்தார். 1959க்கு பிறகு சமுதாய குலதெய்வ பரம்பரை கோயில்களில் ஹிந்து சமய அறநிலைத்துறையால் அமைக்கப்பட்ட தக்கார் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். கோயில்களில் கைப்பற்றப்பட்ட உலோக, தெய்வ சிலைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில்களின் காலி பணியிடங்களை வெளிப்படையான முறையில் தகுந்த தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஹிந்து மக்களின் உணர்வுகளை மதிக்கும் விதமாக நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்றும் வகையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். தண்டபாணி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்த நீதிமன்ற உத்தரவை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் பாராட்டுகிறது. இந்த மோசடி பத்திரப்பதிவில் ஈடுபட்ட பத்திரப்பதிவு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் கோயில் கனபாடிகள் சந்திரமவுலீஸ்வரர், கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் பாஸ்கரன், மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘போராட்டங்கள்’ எனும் நுால் வெளியிடப்பட்டது.
