/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடை வெயில் தொழிலாளர் நலத்துறை ஆய்வு
/
கோடை வெயில் தொழிலாளர் நலத்துறை ஆய்வு
ADDED : மே 05, 2024 04:31 AM
திண்டுக்கல், : கோடை வெயிலில் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து தொழிலாளர் நலத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைகள், வர்த்தகம், உணவு, மோட்டார் போக்குவரத்து தொழில் நிறுவனங்களில் வெப்ப அலையை எதிர்கொள்ள தயார்படுத்துதல் , தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ,பணியாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் இயங்கும் இடங்களில் சுத்தமான கழிப்பறை, குளியலறை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். தங்குமிடம், இருக்கை வசதி, பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு ,சரியான வேலை நேரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொழிலாளர் துறை அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள தியேட்டர்கள் , அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறிய நிறுவனங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
உதவி ஆணையர் மலர்கொடி கூறியதாவது : பணியிடங்களில் வெப்ப அலை போன்ற இடர்பாடுகளிலிருந்து தொழிலாளர்களை காப்பது நிர்வாகம் , தொழிலாளர் துறை கடமை. அதைக் கண்காணிக்கும் பொருட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக நாளை ( மே 6) காலை 11:00 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது என்றார்.