ADDED : ஏப் 24, 2024 12:25 AM

திண்டுக்கல் : கோடை வெயிலை தாங்க முடியாமல் திண்டுக்கல் மரியநாதபுரம் பெரிய செட்டிக்குளத்தில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதந்தது.
கோடைகாலம் என்றாலே அதிகளவில் வெயில் அடிக்கும் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. இக்காலங்களில் மனிதர்கள் மட்டுமில்லாமல் பறவைகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. திண்டுக்கல் மரியநாதபுரம் பெரிய செட்டிக்குளத்தில் ஜிலேபி,கெண்டை உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளது. இந்த மீன்கள் நேற்று அடித்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கூட்டம் கூட்டமாக இறந்து மிதக்க தொடங்கியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் குளத்திற்கு வந்து யாரேனும் விஷத்தை கலந்து விட்டார்களா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: இக்குளத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கழிவுகள் வந்து கலக்கின்றன. இது நாளடைவில் அமிலமாக மாறுகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமானதால் மீன்கள் தாக்கு பிடிக்க முடியாததால் அனைத்தும் இறந்தது. குளத்தில் கழிவுகள் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

