/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கற்கும் கலைக்கு எல்லையும் இல்லை... விலையும் இல்லை
/
கற்கும் கலைக்கு எல்லையும் இல்லை... விலையும் இல்லை
ADDED : மே 26, 2024 04:49 AM

திண்டுக்கல்
அமெரிக்கா சென்ற விவேகானந்தர் துப்பாக்கி சுடும் பயிற்சியை கண்டபோது பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் விவேகானந்தரை தரம் தாழ்த்தும் நோக்கத்தில் துப்பாக்கியின் பாகங்களை விளக்கி கூறினார். அமைதியாக அனைத்தையும் சிந்தையில் ஏற்றிய சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியை வாங்கி அதில் உள்ள ஆறு குண்டுகளையும் இலக்கு வட்டத்தில் ஒரு மில்லி அங்கூலம் கூட நகராமல் ஒரே புள்ளியில் சுட்டு காட்டினார். அதில் அதிசயித்த அந்த நபரிடம் மனதை ஒருமை படுத்தும் யோகாவின் பெருமையை எடுத்து கூறியது உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. வரலாற்றில் அந்த நிகழ்வை படித்தபின் மாணவர்களின் திறமையை கண்டெடுப்பதற்கான முயற்சியின் களமாக கோடை கால சிறப்பு பயிற்சி திண்டுக்கல் பழைய கரூர்ரோடு ஸ்டிரிங்க் பேட்மின்டன் அகடாமி அரங்கில் 'ஒய் 2மா' அகாடமி சார்பில் ஒரு மாதம் பயிற்சி நடந்தது. இதன் மூலம் கராத்தே, யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங், வெஸ்டர்ன் நடனம், பரதம், நீச்சல் கீபோர்டு, கிடார், டிரம்ஸ் போன்ற கலைகள் கோடைக்கால பயிற்சியாக மாணவர்களுக்கு கற்று தரப்பட்டன. அந்த பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் பெற்ற விருதுகளும், சான்றிதழ்களும் வெறும் அடையாளம்தானே தவிர அங்கீகாரமாகாது. அதற்கு அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் தீவிர பயிற்சி எடுக்க வேண்டும் என சிறப்பு விருந்தினர்கள் கூறி நிகழ்ச்சியை முடித்தது கலைக்கு எல்லையும் புல்லை, விலையும் இல்லை என்ற அற்புத வாசகத்தை பிரதிபலித்தது. மாணவர்களின் எதிர்கால சாதனைக்கான பயிற்சி கூடாரமாகவே இந்த மையத்தை கண்டதாக பெற்றோர்கள் கூறியபோது அவர்கள் கண்களில் தேசத்திற்கான நம்பிக்கை ஒளி சுடர் விட்டது.
கலைக்கு செய்யும்மரியாதை
பிரசாத் சக்ரவர்த்தி, ஒய் 2மா அகாடமி நிறுவனர்: 25 ஆண்டுகளாக இந்த பயிற்சி மையத்தை நடத்தி வருகிறேன். இந்தாண்டின் 25வது கோடைகால பயிற்சி முகாமில் 160 மாணவ பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் ஆர்வமுடன் கலைகளை கற்று தேர்வது எதிர்கால ஒளிமயமான இந்தியாவின் அறிகுறியாகவே தென்படுகிறது. பங்கேற்ற மாணவர்களுக்கு விருது, சான்றிதழ்
வழங்குகிறோம். இதுதவிர 20 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறைக்கு யோகா, கரேத்தே மாஸ்டராகவும் பணிபுரிவதை கலைக்கு செய்யும் மரியாதையாகவே கருதுகிறேன்.
வாழ்வின் அங்கமாகி போனது
சிபின், ஏ.எஸ்.பி., திண்டுக்கல்: கற்ற கல்வியானது படகு போன்றது எனில் அதில் துடுப்பு என்பது உபரி கலைகளாகும். வெறும் கல்வியை கொண்டு சாதனையை நிகழ்த்தினால் அது நிரந்தரமாகாது. பல கலைகளை கற்றவர் பல மனிதர்களுக்கு சமமானவராவர். அந்த வகையில் குழந்தைகளின் கோடை விடுமுறை காலத்தில் அவர்களுக்கான பல்வேறு பயிற்சி கலைகள் கற்று தேர்ந்தது என்பது அவர்களின் வாழ்வில் அங்கமாகி உள்ளது என்பதை காலம் தரும் அனுபவத்தில் மாணவ குழந்தைகள் உணர்வர். கலைகளை கற்று தேர்வது மனித வாழ்வின் பலமானதாக அமையும் என்பதே அனுபவத்தில் நாங்கள் உணர்ந்த உண்மை.
பூவுக்குள் புயலை கண்டோம்
நான்சி புளோரிடா, ஸ்ரீசைதான்யா டெக்னோ பள்ளி முதல்வர்: குழந்தைகளை அவர்கள் வழியில் கொண்டு சென்று திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் முயற்சியே கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமின் நோக்கமாகும். விருதுகள் வெற்றியின் அடையாளமாகாது. அது ஒரு கலைதேர்ச்சியின் அடையாளமாகவே காண வேண்டும்.
கல்லை சிற்பமாக்கும் முயற்சியை போல் கற்று கொடுக்கும் ஆசிரியர்கள் உள்ளதை ஒய் 2மா அகாடமி வெளிப்படுத்தி உள்ளது. பல மழலைகள் கராத்தே பயிற்சி பெற்ற நிலையில் பூவுக்குள் உள்ள புயலை கண்டு அதிர்ந்து போனோம் .
அனைவருக்கும் கற்று தருவேன்
லலிதா, முதல் வகுப்பு மாணவி: இந்த பயிற்சியில் யோகா கற்று கொண்டேன். மிகவும் எளிதாக கற்று கொடுத்ததால் யோகாவில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதை எனது பள்ளி ஆசிரியர்களிடம் செய்து காட்டி பாராட்டை பெறுவதில் ஆர்வமாய் இருக்கிறேன். அதற்காக பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நான் கற்ற யோகாவையும் வீட்டில் அனைவருக்கும் கற்று தருவேன்.
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
நிஷாந்த், 5ம் வகுப்பு மாணவர்: எனது தந்தை போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார். தற்காப்பு கலைகளை கற்று தேர்வது மனித வாழ்வின் ஒரு பகுதியாகும் என்ற அவரது அறிவுரைப்படியாக நான் இந்த பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன்.
ஒரு மாத கால பயிற்சிக்கு பின் தற்போது கராத்தே, சிலம்பம், யோகா, நீச்சல், நடனம், கீபோர்டு இசை கருவிகளில் ஓரளவு தேர்ச்சி கண்டுள்ளேன்.எனது எதிர்கால லட்சியமான கலெக்டர் ஆவதற்கு இந்த பயிற்சிகள் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.