/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'மிளகு' க்கு வந்த சோதனை உற்பத்தியில் பெரும் பாதிப்பு
/
'மிளகு' க்கு வந்த சோதனை உற்பத்தியில் பெரும் பாதிப்பு
'மிளகு' க்கு வந்த சோதனை உற்பத்தியில் பெரும் பாதிப்பு
'மிளகு' க்கு வந்த சோதனை உற்பத்தியில் பெரும் பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 06:32 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலையில் பயிரிட்டுள்ள மிளகு செடிகளில் வாடல் நோய்,இலைபுள்ளி,பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் சிறுமலை என்றாலே மலை வாழை,பலாப்பழம் இரண்டுமே உலகளவில பெயர்போன உணவுப்பொருளாக உள்ளது. இவை தவிர இங்கு மருத்துவ குணம் நிறைந்த மிளகும் டன் கணக்கில் உற்பத்தியாகிறது. சிறுமலை பழையூர்,புதுார்,தென்மலை,கடமன்குளம் பகுதியில் 100க்கு மேலான விவசாயிகள் 300 க்கு மேலான ஏக்கரில் மிளகு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மிளகு செடிகளை படர விட மரங்களை வளர்த்து அதன்மீது படர விடுகின்றனர். இந்தபணிகள் முழுமையாக முடிவதற்கு 7 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு தான் செடிகளிலிருந்து மிளகு உற்பத்தியாகிறது.அதன்பின் 20 ஆண்டுகள் வரை பலன் தருகின்றன. சிறுமலையில் ஆண்டுக்கு 200 டன் வரை மிளகு உற்பத்தி நடக்கும் நிலையில் இந்தாண்டு காலம் தவறிய பருவ மழையால் மிளகுகள் சிறியளவில் இருக்கும் போதே கீழே உதிர்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதோடு செடிகளில் வாடல் நோய், இலைப்புள்ளி, பூச்சி தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு பலரும் மிளகு விவசாயத்தை கைவிடும் நிலைக்கு வந்துள்ளனர்.
மிளகு செடிகள் இலவசமாக வழங்கும் தோட்டக்கலைத்துறை அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை. மிளகு உற்பத்தியை ஊக்கப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மிளகு செடிகளை படரவிடுவதற்கு சிமென்ட் போஸ்ட் வழங்க ஏற்பாடு செய்யலாம்.
விவசாயத்தில் சிக்கல்
விக்னேஷ்தியாகராஜன்,மிளகு உற்பத்தியாளர்,சிறுமலை: சிறுமலை புதுாரில் 40 ஏக்கரில் நான் மிளகு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
இதற்கு தண்ணீர் தேவை இல்லை என்பதால் பலரும் இதை ஆர்வமாக செய்கின்றனர். இருந்தபோதிலும் இந்த தொழிலில் பொறுமை மிக அவசியம். மிளகு செடிகள் மரங்களில் படர்ந்து அதிலிருந்து மகசூல் பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆகும். அதுவரை காத்திருக்க வேண்டும்.
2023 ஐ விட இந்தாண்டு மிளகு உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காலம் தவறி பெய்த பருவ மழை தான். தற்போது செடிகளில் நோய் ,பூச்சி தாக்குதல் உள்ளதால் மிளகுகள் உற்பத்தி ஆவதில் சிக்கல் உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இதன் பிரச்னையை தீர்வு காண வேண்டும் என்றார்.