ADDED : ஜூலை 19, 2026 06:21 PM
வடமதுரை: மயிலாடுதுறை விழுப்புரம் ரயில்களை அய்யலுாரில் மீண்டும் நின்று செல்ல வலியுறுத்தி தமிழர் தேசம் அறிவித்த மறியல் அறிவிப்பை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மீட்டர்கேஜ் தடத்தில் அய்யலுாரில் காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் ரயில் போக்குவரத்து வசதி இருந்தது. 1998ல் அகல ரயில் பாதையாக மாறிய பின்னர் காலை, இரவு நேரங்களில் சென்ற திண்டுக்கல் திருச்சி, மதுரை விழுப்புரம் பயணிகள் ரயில்கள் மட்டும் நின்றன. மதியம் நேரத்தில் சென்ற திருநெல்வேலி மயிலாடுதுறை பயணிகள் ரயில் நீண்ட முயற்சிக்கு பின்னர் 19 ஆண்டுகள் கழித்து 2017 செப்டம்பர் முதல் அய்யலுாரில் நின்று சென்றது. 2020ல் கொரோனா பிரச்னைக்கு பின்னர் தற்போது அய்யலுாரில் திண்டுக்கல் திருச்சி பயணிகள் ரயில் மட்டும் நிற்கிறது. மற்ற இரு ரயில்களும் எக்ஸ்பிரஸ் என மாறிய பின்னர் அய்யலுாரில் நிற்பதில்லை. இந்த ரயில்களுக்கு மீண்டும் அய்யலுாரில் நிறுத்தம் கோரி தமிழர் தேசம் கட்சியினர் இன்று (ஜூலை 20ல்) ரயில் மறியல் செய்வதாக அறிவித்தனர். இதற்காக வடமதுரையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா, ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரதா, வடமதுரை இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக 10 நாட்கள் அவகாசம் வழங்கி போராட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தினர். இதை அக்கட்சியினர் ஏற்காததால் சமரசம் ஏற்படாமல் கூட்டம் முடிந்தது.
