/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆமை வேகத்தில் சுரங்கப்பாதை பணி; மக்கள் அவதி
/
ஆமை வேகத்தில் சுரங்கப்பாதை பணி; மக்கள் அவதி
ADDED : ஏப் 13, 2024 02:42 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் சிலுவத்துார் ரயில்வே மேம்பாலத்தின் சுரங்க வழிப்பாதை பணியானது ஆமை வேகத்தில் நடப்பதால் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் சிலுவத்துார் ரயில்வே மேம்பால பணியானது ஏழரை ஆண்டுகளாக நடைபெற்று ஐந்துமாதங்களுக்கு முன் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால் அந்த வழித்தடமானபாலகிருஷ்ணாபுரம், ஏர்போர்ட் நகர், ஒத்தக்கடை, திருமலைக்கேணி, சிலுவத்துார், செந்துரை உட்பட பல கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி சென்று வருகின்றனர். மழை விட்டாலும் துாவானம் விடாது என்ற கதையாக மேம்பாலம் திறக்க பட்டாலும் அதன்
சுரங்க வழிப்பாதை பணியானது நிறைவடையாமல் இன்னும் இழுத்து கொண்டே செல்கிறது.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இதன் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த பல நுாறு குடும்பங்களின் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறி காலம் தாழ்த்தினர்.
தற்போதைய கோடை காலத்திலாவது மேம்பால சுரங்க வழிப்பாதையின் பணி விரைவில் முடியும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிலும் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இதனால் பலர் ஜி.டி.என்.,சாலையில் உள்ள குறுக்கு சந்தில் பயணிப்பதால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து உருவாகிறது.
இந்த பாதையிலும் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பயணத்தில் மிகுந்த சிரமம் ஏற்பட ரெங்கநாதபுரம் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். சிலுவத்துார் ரோட்டிலுள்ள மேம்பாலத்தின் சுரங்க பாதை பணியை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை குடியிருப்பாளர்களிடம் வலுத்துள்ளது.

