ADDED : மே 08, 2024 05:51 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக கிளை 3ல் ஊழியர்கள் பயன்படுத்தும் குடிநீர் கலங்களாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதை கண்டித்து 2 பாட்டில்களில் நீரை நிரப்பி வாசலிலிருக்கும் போர்டில் தொங்க விட்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர் டிரைவர்,கண்டக்டர்கள்.
திண்டுக்கல் பழநி ரோட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை 3 பணிமனை செயல்படுகிறது.
இங்கு 250க்கு மேலான டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
மாநகராட்சியிலிருந்து குடிநீர் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக தண்ணீர் வாங்கப்படுகிறது. இந்த தண்ணீர் நீண்ட நாட்களாக கலங்களாகவும், சுகதாரக்கேடாகவும் உள்ளது.
இதோடு டிரைவர்,கண்டக்டர்கள் தங்குமிடங்கள்,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக பராமரிக்காமல் உள்ளது. இதனால் போக்குவரத்து பணியாளர்கள் தொடர் அவதியை சந்திக்கின்றனர்.
இதை கண்டித்து நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு.,சார்பில் பணியாளர்கள் சுகாதாரக்கேடான குடிநீரை 2 பாட்டில்களில் நிரப்பி, வாசலில் உள்ள போர்டில் தொங்க விட்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகமது ராவுத்தர்,கிளை 3 மேலாளர்: பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தான் செய்கிறோம்.
சமீபத்தில் பணியாளர்கள் தங்கும் அறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரி செய்து கொடுத்தோம்.
குடிநீர் சுத்தமாக தான் வழங்குகிறோம். கலங்களாக இருந்தால் அதை மாற்றி சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்வோம் என்றார்.

