/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
/
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
சின்னாளபட்டியை தரம் உயர்த்தலாமே மக்கள் தொகைக்கு ஏற்ற கட்டமைப்புகள் தேவை
ADDED : ஜூலை 04, 2024 02:15 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.
சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஆத்துார் தொகுதியில் உள்ள 7 பேரூராட்சிகளில் அதிக பரப்பளவு கொண்ட பேரூராட்சியாக இது உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,285 ஆக இருந்தது. 2021 கணக்கெடுப்பில் 40 ஆயிரம் பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டது. பேரூராட்சியின் சுற்றுப்பகுதிகளில் அம்பாத்துறை, கலிக்கம்பட்டி, சீவல்சரகு, காந்திகிராமம் ஊராட்சிகள் இருந்த போதும் விரிவாக்க பகுதிகளுடன் பேரூராட்சியின் குடியிருப்புகள் எண்ணிக்கை விரிவடைந்து வருகிறது. இருப்பினும் இவற்றிற்கேற்ப உள்ளாட்சி அமைப்பு சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் பராமரிப்பிலும் பின்னடைவு நீடிக்கிறது.
பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை செயல் அலுவலர் தலைமையில் 127 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.பேரூராட்சியின் சொத்து வரி வருமானமாக 2 கோடி ரூபாயும், தொழில்வரி மூலம் ரூ.13 லட்சம், குடிநீர் கட்டண மூலம் ரூ. 87 லட்சம் ,கடைகளுக்கான அனுமதி கட்டண மூலம் மூன்று லட்ச ரூபாய் என பொதுமக்களிடமிருந்து வசூலாகிறது.
இவை தவிர புதிய வீடு, கடைகள் கட்டும் அனுமதிக்கான பயனாளிகளிடமிருந்து 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை வசூலாகிறது. இவற்றில் பணியாளர்களுக்கான மாத சம்பளமாக ரூ. 35 லட்சம் ,குடிநீர் வினியோக மின்பம்புகள், தெரு விளக்கு பராமரிப்பதற்கு 18 லட்சம், பொது சுகாதாரம், குடிநீர் வழங்கலுக்காக 10 லட்ச ரூபாயும் செலவாகிறது. சுய உதவி குழுவினர் உட்பட பணியாளர் சம்பளம் வழங்களுக்காக 35 லட்ச ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
சிறப்பு நிலை பேரூராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட சின்னாளபட்டி விரைவில் நகராட்சியாக மாறும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதியினரிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் புதிதாக பேரூராட்சிகளுக்கான தரம் உயர்த்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இச்சூழலில் சின்னாளபட்டியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு குறித்து இப்பகுதியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வசதிகளுக்கு வாய்ப்பு
பாண்டியன்,காந்திகிராம கூட்டுறவு பண்டக சாலை முன்னாள் மேலாளர், சின்னாளபட்டி:
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்டதாக சின்னாளப்பட்டி அமைந்துள்ளது. வணிக செயல்பாடுகள் அடிப்படையில் தொழில், நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை கொண்டுள்ளது. இதனை நகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் சின்னாளபட்டியில் உள்ள 18 வார்டுகள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களுக்கும் தேவையான மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதி, போக்குவரத்து, தெருவிளக்குகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூடுதலாக உருவாக்க வாய்ப்பு ஏற்படும்.
பராமரிப்பில் தொய்வு
செல்வராஜ்,கூலித்தொழிலாளி, சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, குடியிருப்புகளின் எண்ணிக்கை ஏற்ப அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. கூடுதல் பணியாளர்கள் இல்லாத சூழலில் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்படும் அவல நிலை உள்ளது. ரோடு, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடியிருப்புகளுக்கு ஏற்ற கூடுதல் போக்குவரத்து, சுகாதார கட்டமைப்புகள் முழுமையற்ற சூழலில் உள்ளன. சுங்குடி, நெசவு, தனியார் கூலித்தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் போதிய அடிப்படை வசதிகளற்ற சூழலில் தவிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்போரின் நலன் கருதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டியது அவசியம்.
--மேம்படுத்தலில் தடை
குருசாமி, முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: அதிக மக்கள் தொகை, தொழில் நிறுவனங்கள், வர்த்தக பண பரிவர்த்தனை போன்றவை 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
வத்தலகுண்டு, நத்தம், வேடசந்துார், நிலக்கோட்டை என பிற சிறப்புநிலை பேரூராட்சிகளை விட இங்கு குடியிருப்புகள் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துள்ளது.
இருப்பினும் உரிய கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு இல்லாததால் இப்பகுதியின் வளர்ச்சி பல ஆண்டுகளாக தடைபட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுத்து சின்னாளபட்டி மேம்படுத்தலில் உள்ள தடையை அகற்ற முன்வர வேண்டும்.