ADDED : ஏப் 08, 2024 05:30 AM
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் கொளுத்தும் வெயிலால் அரசியல் கட்சியினர் தங்களின் பிரசார நேரத்தை மாற்றியமைத்து வருகின்றனர்.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேர்தல்களமானது சூடு பிடித்துள்ளது.
அதேநேரத்தில் கோடை வெயிலும் ஆக்ரோஷமாக தன் பணியை தொடங்கியுள்ளது. வழக்கமாக அரசியல் கட்சியினரை காலை நேரங்களில் பார்ப்பதே அரிதான ஒன்று. பொறுமையாக 10 :00மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியானாலும் செல்வர். ஆனால் தற்போது காலை 9:00 மணிக்கெல்லாம் வெயில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறது .வெயிலோடு மல்லுகட்ட முடியாமல் கட்சியினர் தங்களது பிரசார நேரத்தை மாற்றி வருகின்றனர்.
அதன்படி காலை 6 :00 மணி முதல் 9:00 மணி வரை , மாலை 4 :00மணி முதல் 9:00மணி வரை என பிரசார நேரத்தை மாற்றி விட்டனர். காலை 11:00 மணிக்கு மேல் கட்சியினர் ஏற்பாடு செய்த ஆட்டோ, சரக்கு வாகனங்களில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கிகள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. அந்த நேரத்தில் தங்களது தேர்தல் அலுவலகங்களில்கூட்டங்கள், முக்கிய முடிவுகள் போன்றவற்றை கலந்தாலோசிக்கின்றனர். முக்கிய கட்சியினரும் இதே பாணியை தான் பின்பற்றுகின்றனர். ஒரு வேளை அரசியல் தலைவர்கள் எவரேனும் பிரசாரத்திற்கு வந்துவிட்டால் திறந்த வேனில் வெயிலில் நிற்க வேண்டுமே என்பதை எண்ணி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். கட்சிகளுக்குள் மல்லுகட்டுகிற நேரத்தில் வெயிலோடு போராட வேண்டியதாயிற்று என புலம்பல்கள் தான் அதிகமாக ஒலிக்கிறது.

