/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுகளால் நிரம்பிய வையாபுரி குளம்
/
கழிவுகளால் நிரம்பிய வையாபுரி குளம்
ADDED : மார் 06, 2025 03:58 AM

பழநி : பழநி வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலப்பதாலும் அமலை செடிகளாலும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
பழநி வையாபுரி குளம் 300 ஏக்கர் பரப்புள்ள வையாபுரி குளத்தில் 5 ஏக்கர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வையாபுரி குளம் மூலம் நேரடியாக நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய பாசன வசதி பெறுகிறது. வையாபுரி குளத்தின் கரைகளை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி நிரந்தரமாக தண்ணீர் தேக்கிவைத்து.
குளங்களில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல தண்ணீராக மாற்றி, வையாபுரி கரையை மேம்படுத்தி, நடைபாதை பூங்காக்கள் அமைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின் படி ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் மூலம் சர்வே பணிகள் நடந்தது. ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தற்போது நகரில் சாக்கடை கழிவுநீர் கலந்து குளத்துரோட்டில் வீசுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். வையாபுரி குளத்தில் அமலைச் செடிகளால் மூடி உள்ளது. இக்குளங்களில் கலக்கும் கழிவு நீரால் குளம் மாசடைகிறது.
ஒத்துழைப்பு இல்லை
ராஜசேகர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர், அப்துல்கலாம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பழநி: வையாபுரி குளத்தில் பழநி நகராட்சி 33 வார்டு கழிவுநீரும் கலக்கிறது.
பழநி முருகன் கோயிலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இந்தக் குளத்தில் கலக்கிறது. இதை தடுக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. குளத்தின் பாசன விவசாயிகள் மூன்று போகம் விளைந்தது.
தற்போது ஒருபோகம் கூட விளைவது இல்லை. சுத்திகரிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கோவையில் உள்ள குளங்கள் துாய்மை செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அது போல் வையாபுரி குளமும் துாய்மைப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீரால் பாதிப்பு
கோகுலகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பழநி : வையாபுரி குளம் மாசடைந்த குளத்தை மீட்க வேண்டிய கடமை நம் தலைமுறைக்கு உண்டு. 22 இடங்களுக்கு மேல் கழிவு நீர் கலக்கிறது.
இதனால் கழிவுநீர் குளம் என மாறி உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரம், பாழ் பட்டுள்ளது. ராஜ வாய்க்காலில் வரும் தண்ணீர் தடைபட்டுள்ளது.
இந்தக் குளத்திலிருந்து செல்லும் நீரால் அடுத்த குளமாக சிறுநாயக்கன் குளம், பாப்பான்குளம் போன்றவை கழிவு நீரால் பாதிக்கப்படுகிறது.
தனி மனிதர்களுக்கு பொறுப்பு வேண்டும். அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அமலைச் செடிகளால் குளத்தின் நீர் மற்றும் மண் பாதிக்கப்பட்டுள்ளது.