/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
/
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
ரோடுகளில் வாகனங்கள்; அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டில் தொடரும் அவதி
ADDED : ஆக 02, 2024 06:39 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருப்பது வட்டக்கானல் . கொடைக்கானல் நகராட்சியின் 10வது வார்டாக உள்ள இங்கு டால்பின் நோஸ், வட்டக்கானல் அருவி, பசுமை பள்ளத்தாக்கு, கோல்ப் மைதானம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு பகுதி சுற்றுலாவிற்கு பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது.
இங்கு அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் அவதிப்படுகின்றனர்.பள்ளம் மேடான ரோடால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குடிநீர் பிரச்னையால் மக்கள் அல்லாடுகின்றனர். காட்டுமாடுகள் நடமாட்டம், குரங்குகள் தொல்லையால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர், பார்க்கிங் வசதி இல்லாமல் வாகனங்களை ரோடுகளில் நிறுத்தும் நிலை உள்ளது.
மின்தடையால் அவதி
தில்லைநாதன், சுற்றுலா வழிகாட்டி: குடிநீர் பிரச்னை நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. காட்டுமாடு, தெரு நாய் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பஞ்சத்திற்கு வெளியில் இருந்து தான் குடிநீர் கொண்டு வரும் அவலம் உள்ளது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அவதி அடைகிறோம். 10 தினங்களுக்கு ஒரு முறை குப்பை அகற்றும் அவலம் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கழிப்பறை , குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. சுற்றுலா முக்கியத்துவமான வட்டக்கானலில் சுற்றுலா மேம்படுத்த வேண்டும். குப்பை சரிவர அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.
40 ஆண்டாக தவிப்பு
பாலாஜி, வியாபாரி : பசுமை பள்ளத்தாக்கு ஹில்டாப் ரோடு சேதம் அடைந்து குண்டு குழியுமாக உள்ளது.
பசுமை பள்ளதாக்கில் கார் பார்க்கிங் வசதி இன்றி குறுகிய இடத்தில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்கும் அவலம் உள்ளது.
குடிநீர் வசதி 40 ஆண்டாக இல்லாமல் அவதியடைகிறோம். ஹாலிடே ஹோம் பசுமை பள்ளத்தாக்கு வரை ரோட்டோரங்களில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும், நீர்நிலை ஆக்கிரப்புகளும் அதிகரித்துள்ளது. நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளோம். கவுன்சிலரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.
அனுமதியின்றி காட்டேஜ்கள்
டேவிட் ,பசுமை பள்ளத்தாக்கு: வட்டகானல் பசுமை பள்ளத்தாக்கு இடையே தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. பாம்பார்புரம் ரோடு சேதமடைந்து பள்ளம் மேடாக உள்ளது.
வட்டக்கானல் பகுதியில் கார் பார்க்கிங் வசதி இன்றி அவதியுறும் நிலை உள்ளது. வட்டக்கானல் திருவள்ளுவர் நகர் இடையே ரோடு சர்வே செய்து இதுவரை பணிகள் துவங்காமல் உள்ளது. கீழ் குண்டாறு குடிநீர் திட்டம் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இப்பகுதியில் பட்டா உள்ளவர்களுக்கு அடங்கலில் பெயர்கள் ஏற்றாத நிலை உள்ளது. அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி மூலம் நடவடிக்கை
முகமதுஇப்ராஹிம், (தி.மு.க.,) கவுன்சிலர் : இதுவரை ரூ.12 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. கீழ் குண்டாறு குடிநீர் திட்டம் திருவள்ளுவர் நகர், வட்டக்கானல், பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் நீட்டிக்கப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன. வட்டகானல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பசுமை பள்ளத்தாக்கு பகுதியிலும் 8 ஏக்கர் நிலம் விரைவில் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. மின்தடை குறித்து புகார் தெரிவிக்கப்படும் நிலையில் உடனுக்குடன் சீர் செய்யப்பட்டு வருகிறது. குப்பை நாள்தோறும் அள்ளப்படுகின்றன.
கில்டாப் ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரோட்டோர ஆக்கிரமிப்பு , நீர்நிலை புறம்போக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.