ADDED : ஆக 27, 2024 01:41 AM

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. கே.சி.பட்டி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த யானைகள் கடுகுதடி வனப்பகுதியில் முகாமிட்டு அருகில் உள்ள குன்னவழி, இடைமலை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து சவ்சவ் பந்தல், காபி, வாழை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
விவசாய பைப் லைன் தோட்ட வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஒரு வாரமாக யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட போதும் இடம் பெயராது போக்கு காட்டுகிறது. யானை நடமாட்டத்தால் இப்பகுதி விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' யானைகள் சேதப்படுத்திய விவசாய பயிர்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கும் பணியை செய்து வருகிறோம். வெடி வெடிக்க செய்து விரட்டும் பணியை மேற்கொண்டு வருகிறோம் '' என்றார்.