UPDATED : நவ 10, 2026 10:03 AM
ADDED : நவ 10, 2026 10:00 AM
செம்பட்டி: செம்பட்டியில் மின்னழுத்த குறைபாடு காரணமாக 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததால் கவலை அடைந்தனர்.
திண்டுக்கல் செம்பட்டி பச்சமலையான் கோட்டை தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நவ.,7ல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனை மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சரி செய்தனர்.
இதை தொடர்ந்து தீபாவளி நாளில் விவசாயி பாண்டி 65, வீட்டில் மின்சாதன பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த அனைவரும் அலறி அடித்தபடி வெளியேறி தப்பினர். வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி., மின்விசிறி, தோட்டத்தில் மின் மோட்டார் அறையில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தன. மின் சப்ளையில் ஏற்ற தாழ்வால் இவ்விபத்து நடந்துள்ளது. அதே பகுதி முத்துப்பாண்டி 55, மகேஸ்வரன் 42, மாரிமுத்து 27, சுரேஷ் 40, மாரியப்பன் 65, தங்கப்பாண்டி 60, மயில்பாண்டி 45, உட்பட பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வீடுகளில் அனைத்து மின்சாதன பொருட்களும் இதுபோன்று சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘புகார் அளித்தால் மின்வாரிய ஊழியர்கள் உடனே வந்து பார்ப்பதில்லை. அவர்களது அலட்சியத்தால் வீடு, தோட்டங்களில் மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன’ என்றனர்.
