/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் நிறுவனத்தில் 14 மணி நேரம் ரெய்டு
/
திண்டுக்கல் நிறுவனத்தில் 14 மணி நேரம் ரெய்டு
ADDED : நவ 25, 2024 03:36 AM
திண்டுக்கல்: திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல் ஏ.ஆர்.,டெய்ரி நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 14 மணி நேரம் சோதனை நடத்தினர்.
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகின. பிரசாதத்துக்கான நெய் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்தது. அதே நேரத்தில் வழக்கும் பதியப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை திண்டுக்கல் நிறுவனம் மீறி செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ., இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினை (எஸ்.ஐ.டி.,) உச்சநீதிமன்றம் அமைத்தது.
இந்த சிறப்பு புலானாய்வுக்குழுவில் சி.பி.ஐ., தரப்பில் இருவர், மாநில போலீசார் தரப்பில் இருவர், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தரப்பில் ஒருவர் என 5 பேர் இடம் பெற்றனர். திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் 14 மணி நேரம் சோதனை நடத்தி மாதிரியை சேகரித்து சென்றார். இந்த சோதனையின்போது நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் பகுப்பாய்வுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பால் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
நெய் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தலைமையில் 14 பேர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு சென்றனர். சோதனை ஆவணத்துடன் வந்த அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 2:00 மணி வரை விசாரணை நடத்தினர். ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுனத்திலிருந்து பல்வேறு பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். பல்வேறு முக்கிய ஆவணங்களை சேகரித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.