/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 1457 மி.மீ., மழை
/
மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 1457 மி.மீ., மழை
ADDED : அக் 16, 2024 06:39 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் சீரான இடைவெளியில் பெய்த மழையால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1457 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 1:00 மணிக்கு பின் மழை பெய்ய தொடங்கி விடுகிறது. இதனால குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதிகபட்சமாக அக். 12 ல் 359.40 மி.மீ., மழை பதிவாகியது. இதற்கு முன் அதிகபட்சமாக அக். 8 ல் 269.70 மி.மீ., 9 ல் 211.40 மி.மீ., மழை பதிவான நிலையில் நேற்று காலை நிலவரப்படி 223 மி.மீ., மழை பதிவாகியது.
இதேபோல் கொடைக்கானல் பழநி, ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கிறது. கொடைக்கானலில் பெய்யும் மழையின் காரணமாக பழநியில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக 66 அடி வரதமாநதி அணை முழு அளவை எட்டியதால் வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்படுகிறது. பெய்து வரும் மழையால் ஒரு வாரத்தில் 1000 மி.மீ., தாண்டியே பதிவாகி உள்ளது.
பள்ளி வகுப்பறையில் தண்ணீர்
பழநி: பழநி சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து ஓடியது. ராஜாஜி சாலை, பூங்கா ரோடு பகுதி ரோட்டின் பிளாட்பார்ம்களில் சாக்கடைகளின் மேல் மூடி இல்லாததால் மழை நீர் செல்ல 7 அடி உயர சாக்கடைக்குள் மனிதர்கள் விழும் அபாய நிலை உள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நெய்க்காரப்பட்டி அருகே கொழுமம் சாலைகளில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
சுக்கமநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளியில் ஓடுகளில் தண்ணீர் வடிந்து வகுப்பறைக்குள் வந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் மழை தண்ணீர் வடிந்த வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சாலைகளின் சாக்கடை நீர் மழைநீருடன் சேர்ந்து ஓடியதால் பாதசாரியை முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.
குதிரையாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை
பழநி: தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு ,வரதமாநதி அணை, குதிரையாறு அணை அதிக நீர்வரத்தை பெற்றுள்ளது. இதில் வரதமாநதி அணை சில மாதங்களாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பாலாறு -பொருந்தலாறு அணியின் நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணிக்கு 52.13அடியாக ( 65அடி) உயர்ந்துள்ளது. வரத்து 14.33 கன அடி,வெளியேற்றம் 9 கன அடியாக உள்ளது. வரதமாநதி அணையில் நீர்வரத்தும், வெளியேற்றமும் வினாடிக்கு 147 கனஅடியாக உள்ளது. குதிரையாறு அணை 74.55 அடியாக (80 அடி) உள்ளது. வினாடிக்கு 167 கன அடி நீர் வரத்தும், 7 கன அடி வெளியேற்றமும் உள்ளது.
குதிரை ஆறு அணை நேற்று மாலை 4:30 மணிக்கு 75 (80)அடியாக உயர்ந்த நிலையில் இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் குதிரை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்களுக்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மழையால் பெண் பலி
பழநி: ஆயக்குடியை சேர்ந்த கூலித் தொழிலாளி கற்பகம் 42 . நேற்று மாலை வீட்டுற்கு நடந்து செல்லும் போது மழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருக்க காமராஜர் என்பவர் வீட்டின் சுவர் அருகே நின்றார். இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிப்பாடுகளில் சிக்கிய கற்பகம் இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.