/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வத்தலக்குண்டில் கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன; வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
/
வத்தலக்குண்டில் கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன; வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
வத்தலக்குண்டில் கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன; வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
வத்தலக்குண்டில் கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன; வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
ADDED : செப் 29, 2024 11:33 PM

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன. வெள்ளத்தில் வீடுகளில் சிக்கியவர்கள் மற்றும் இழுத்து செல்லப்பட்ட மாடுகள், டூவீலர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
வத்தலக்குண்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் 2 மணி நேரம் 56 மி.மீ., கன மழை பெய்தது. ரோட்டில் மழைநீரால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காந்திநகரிலிருந்து வரும் முனியாண்டி சுவாமி கோயில் ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகிலிருந்த குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சிலர் வீடுகளில் சிக்கினர். பலர் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் இருந்த 15-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மஞ்சள் ஆற்று படித்துறை குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் 5 டூவீலர்கள் இழுத்துச் செல்லப்பட்டன. வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
காந்திநகர் - காமராஜபுரம் இணைப்பு ரோடு வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டது. வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் காட்டாற்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். வீடுகளை இழந்தவர்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். உயிர் சேதம் ஏற்படவில்லை.
மதுரை ரோடு கன்னிமார் கோயில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோகிலாபுரம் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. தனியார் நிறுவனத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்ள்கள் சேதமாயின. முருகன் கோயில் அருகே ரவியின் கறவை மாடு, கன்று குட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 டூவீலர்கள், மாடுகள் நேற்று காலை மீட்கப்பட்டன. ஆர்.டி.ஓ.,சக்திவேல் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர்.