/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தைகள் பாதுகாப்புக்காக நடப்பாண்டில் 434 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
/
குழந்தைகள் பாதுகாப்புக்காக நடப்பாண்டில் 434 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
குழந்தைகள் பாதுகாப்புக்காக நடப்பாண்டில் 434 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
குழந்தைகள் பாதுகாப்புக்காக நடப்பாண்டில் 434 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ADDED : டிச 22, 2024 08:20 AM

திண்டுக்கல் : ''குழந்தைகள் பாதுகாப்புக்காக நடப்பாண்டில் 434 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக'' மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் பணிகள்...
குழந்தைகள் உரிமைகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வினை பொது அமைப்புகளிடையே உருவாக்குதல், சேவை வழங்கும் அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல், அனைத்து அளவிலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டங்கள்,அமைப்புகள் பற்றிய தகவல்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செய்து வருகிறது. இதோடு குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்தல், நிதி ஆதரவு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து வழங்குதல், சட்ட ரீதியாக குழந்தைகள் தத்தெடுத்தலை கண்காணித்தல், பாதுகாப்பு,பராமரிப்புக்கு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் பணிகளும் நடக்கிறது .
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் செயல்பாடுகள்...
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி. வட்டாரம் , கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை கூடி குழந்தைகள் பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழுவிற்கு தெரிவிக்கும்.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறதா...
பிறப்பு விகிதத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் சமூக நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலமாக குழந்தை பங்கேற்பு துறைகளை ஒருங்கிணைத்து பள்ளி குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சிகளில் பெண் குழந்தையின் முக்கியத்துவம், பாலினசமத்துவம், நலத்திட்டங்கள். பாதுகாப்பு சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் பிறப்பு விகிதத்தில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குழந்தைகள் காப்பகங்கள் செயல்பாடு...
இளைஞர்நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற 25 குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகிறது. இதில் அறநிலையத்துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மூலம் மானியம் பெற்று தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக நடத்தப்படுவது, தனியார் என உள்ளன. பெற்றோர்களை இழந்த, பெற்றோர்கள் சிறையில் உள்ள குழந்தைகள், தெருவோர பிச்சை எடுக்கும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுபவர் போன்ற பாதுகாப்பு ,பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து குழந்தைகள் இல்லங்களில் சேர்ப்பது மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு கல்வி நிலை குறித்து கண்காணிக்கிறோம்.
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் ...
குழந்தை திருமணங்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் உடல் , மன ரீதியாக முதிர்ச்சியடையாத நிலையில் இருப்பதால் குடும்பத்தை நிர்வகிக்கவும், ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தவறான முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகிவிடும். இளவயதில் கருவுறுதலால் பெரும்பாலான குழந்தைகள் இறப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் உடலாளவில் சத்துகுறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். குறிப்பாக கல்வி இடைநிற்றல் ஏற்படுகிறது.
விழிப்புணர்வு பணிகள் குறித்து
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், குழந்தை சேவை அமைப்பு 1098 பணியாளர்கள், போலீசார் ,தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மூலம் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடங்கி சுய உதவி குழுக்கள் , பொதுமக்கள் வரை குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
மக்கள் தொடர்பு முகாம்கள், கிராமசபா கூட்டங்கள், மலர் கண்காட்சி என வாய்ப்பு இருக்கும் அனைத்தின் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதுவரை 437 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 46,735 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
நடப்பாண்டில் செய்துள்ள பணிகள் ...
குழந்தைகளில் இல்லங்களில் மாவட்ட ஆய்வுக்குழு மூலம் 106 ஆய்வுகள் ,124 முறை மேற்பார்வை செய்துள்ளோம். 88 இல்ல மேலாண்மை கூட்டங்கள் நடத்தி உள்ளோம். மாநகராட்சி 1, நகராட்சி 8, பேரூராட்சி 47, வட்டாரம் 41, கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்கள் 700 நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு குழந்தை தொழிலாளர்கள் இல்லை என உறுதி செய்கிறோம். பாலியல் தொந்தரவுக்கு உள்ளான குழந்தைகளுக்கு இழப்பீடு நிதி பெற்று வழங்கி உள்ளோம். கல்வி இடைநிற்றலில் உள்ள 64 குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் கல்வியை தொடர்வதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது...
சமூக வலைதளங்களை இன்றைக்கு குழந்தைகள் அதிக ஆர்வமுடன் பயன்படுத்துகின்றனர்.
இதனை பெற்றோர்கள்கண்காணிப்பு செய்து அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் ஒழுக்க நெறிகளை பின்பற்றுதலை உறுதிப்படுத்திட வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி தினம்தோறும் பள்ளிக்கு சென்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பள்ளி செல்லும் ஆண் குழந்தைகளைபெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு சென்று வந்த பின்னர் அன்றைய நிகழ்வுகள் கேட்டறிய வேண்டும். 18 வயது நிறைவு பெறாத எந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்கவோ,வேலைக்கு அனுப்பவோகூடாது. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட எந்த இடர்பாடுகள் ஆனாலும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண் 1098 க்கு அழைப்பு செய்து உடனடியாக அத்தகவல்களை வழங்கிட வேண்டும் என்றார்.