UPDATED : அக் 10, 2026 01:15 AM
ADDED : அக் 10, 2026 01:10 AM
நத்தம்: நத்தம் அருகே காரில் கடத்திய 498 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.
நத்தம் வழியாக காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக எஸ்.பி., ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவில் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., அபினேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பபட்டி பகுதியில் சோதனை செய்தனர். அங்குள்ள தேங்காய் கோடவுனில் சிலர் மினிவேனில் இருந்து புகையிலை பொருட்களை இரண்டு கார்களில் கடத்த முயன்றனர்.
போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மரியசூசை 52, திண்டுக்கல் நாச்சிமுத்து 32, மேட்டுப்பட்டி சுபிக்சா 25, என தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். 498 கிலோ புகையிலை பொருள், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மினிவேன், 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய தீபக், சத்தியராஜ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
எஸ்.பி., கூறுகையில், ‘புகையிலை பொருட்கள் கடத்தலில் கடந்த 9 மாதங்களில் 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்து 300 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
