/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு கட்டு வாழை இலை ரூ.4000க்கு விற்பனை
/
ஒரு கட்டு வாழை இலை ரூ.4000க்கு விற்பனை
ADDED : செப் 21, 2024 12:41 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் மழையின்றி வரத்து குறைந்ததால் ரூ.500க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு வாழை இலை விலை உயர்ந்து ரூ.4000க்கு விற்கப்படுகிறது.
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளான ஆத்துார், சாணார்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் சில மாதங்களாக வாழை பயிரிடும் பகுதிகளில் போதிய மழை பெய்யாமல் வறட்சியான நிலை ஏற்பட்டது. வாழை விவசாயிகளுக்கு அதை பயிரிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் வாழை இலைகளின் உற்பத்தி குறைந்தது. தொடர்ந்து திருமணம், கோயில் திருவிழாக்கள், ஓட்டல்கள் பயன்பாடு உள்ளிட்டவைகளில் வாழை இலைகளின் தேவைகளும் அதிகரித்தது. உற்பத்தி குறைந்து தேவை அதிமானதால் 10 நாட்களாக ரூ.500க்கு விற்ற ஒரு கட்டு வாழை இலை விலை உயர்ந்து தற்போது ரூ.4000க்கு விற்கப்படுகிறது.
திண்டுக்கல் சுற்று பகுதி ஓட்டல்களில் வாழை இலை விலை அதிகரித்ததால் அதை வாங்க முடியாமல் பார்சல்கள், சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் கவர்களில் உணவு பரிமாற ஆரம்பித்துள்ளனர். தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி பலரும் விரதம் கடை பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் வாழை இலை விலை அதிகரித்திருப்பது கோயில் நிர்வாகிகளையும் கலக்கமடைய செய்துள்ளது.
திண்டுக்கல் வாழை இலை வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:
திண்டுக்கல் வாழை இலையை விரும்பி மற்ற மாநிலங்களில் கேட்பார்கள். அதனால் தினமும் இங்கிருந்து நுாற்றுக்கணக்கான இலைக்கட்டுகள் வெளியூருக்கு அனுப்பப்படுகிறது. பெரிய இலை கட்டில் 250 இலை இருக்கும். சிறிய கட்டில் 400 இலை இருக்கும். ஒரு இலை ரூ.8க்கு விற்கப்படுகிறது. தற்போது மழை இல்லாததால் இலைகளின் வரத்து குறைந்தது. தேவை அதிகளவில் இருந்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது.
மழை பெய்தால் மட்டும் தான் விலை குறையும் என்றார்.