/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்
/
நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்
ADDED : ஜன 08, 2024 05:42 AM

நிலக்கோட்டை : நிலக்கோட்டை பகுதியில் சார்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,வழக்கறிஞர்கள்,வியாபாரிகள் என பலதரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.
மதுரை மாவட்டமாக இருந்த காலத்திலிருந்து நிலக்கோட்டை தாலுகா சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளையும் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் உதயமான போது நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டு வாடிப்பட்டி, சமயநல்லுார் தனி தாலுகாக்களாக பிரிக்கப்பட்டது. தற்போது நிலக்கோட்டை தாலுகாவில் 40 ஊராட்சிகளும், 5 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. 2 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த தாலுகாவில் சார்பு நீதிமன்றம் இல்லை. நிலக்கோட்டைக்குப் பின்பு தாலுகாவான வேடசந்துார், வாடிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வழக்கறிஞர் சங்கம், இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க அனுமதி அளித்தது. சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கு 2 ஆண்டு இழுபறிக்கு பின் அணைப்பட்டி ரோட்டில் இடம் ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சார்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பணிகள் கிடப்பில் உள்ளது. சார்பு நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் தொடர் முயற்சி எடுத்து வருகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகளும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்கா லிக அ னுமதி வேண்டும்
பாண்டி, வழக்கறிஞர், நிலக்கோட்டை: பல ஆண்டு கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் இருந்தாலும் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு கிடைத்தது.
இடம் கிடைப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கி தற்போது அணைப்பட்டி ரோட்டில் கிடைத்தது. இதற்கு இடையே தாலுகா அலுவலக வளாகத்தில் பழைய தாலுகா அலுவலக கட்டடம் பயன்பாடின்றி இருப்பதால் அந்தக் கட்டடத்தை தற்காலிக சார்பு நீதிமன்றத்திற்கு பயன்படுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவு வழங்க வேண்டும்.
பெருமை கிடைக்கும்
எம்.முருகன், காங்.,இதர பிற்பட்டோர் துறை மாநில செயலாளர், நிலக்கோட்டை: மாவட்டத்தின் எல்லை பகுதியில் நிலக்கோட்டை தாலுகா உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு செல்ல பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இதனால் பல ஆண்டுகளாக நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடிக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் அறிவிப்பு வந்தது. தற்காலிகமாக தாலுகா அலுவலகத்தை சார்பு நீதிமன்றத்திற்கு உபயோகிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
மேலும் புதிய சார்பு நீதிமன்ற கட்டடத்திற்கு வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கட்டட பணிகள் துவக்கினால் பழமையான தாலுகாவிற்கு பெருமை கிடைக்கும். தாலுகாவில் உள்ள வழக்கறிஞர்கள் திண்டுக்கல்லிற்கு அலையாமல் நிலக்கோட்டையிலேயே பணிகள் பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
சிரமம் குறையும்
செல்லபாண்டியன், பா.ஜ., வழக்கறிஞர், நிலக்கோட்டை: புதிய நிதியாண்டில் சார்பு நீதிமன்றத்திற்கு நிதி ஒதுக்கி கட்டடங்கள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகாவில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிப்பதால் நிலக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைந்தால் அவர்களது சிரமம் குறையும்.
பயணம், நேரம், பணம் செலவு மிச்சமாகும். எங்களைப் போன்ற வழக்கறிகர்ளுக்கும் வேலைவாய்ப்பு பெருகும். பல புதிய இளம் வழக்கறிஞர்கள் பணிக்கு வருவர். சார்பு நீதிமன்றம் நிலக்கோட்டையில் அமைந்தால் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெறுவர். நிலக்கோட்டையின் பழமைக்கு புதிய பெருமை கிடைக்கும்.