/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுடன் பசுமையாகும் மந்தைக்குளம்
/
மரக்கன்றுடன் பசுமையாகும் மந்தைக்குளம்
ADDED : ஜூலை 28, 2025 05:21 AM

வடமதுரையில் மந்தைக் குளத்தில் கடந்த பல ஆண்டுகளாக பெரும்பகுதி நகரத்தின் கழிவு நீரே சேகரமாகி நிரம்பி துர்நாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது பேரூராட்சி மூலம் ரூ.4.71 கோடி மதிப்பில் பணிகள் நடந்து பூங்கா, மரங்கன்றுகளுடன் நடை பயிற்சி வசதியான இடமாக மாற்றம் கண்டுள்ளது.
வடமதுரையில் அருகில் போஜனம்பட்டி ரோட்டில் இருப்பது மந்தைக் குளம். இக்குளத்தை நம்பி பல ஏக்கர் பாசன வசதி பெறும் நிலங்களும் உள்ளது. 2008க்கு பின்னர் வேலாயுதம்பாளையம் பண்ண மலைப்பகுதியில் போதியளவு மழைப்பொழிவு இல்லாததால் வடமதுரை மந்தைக்குளத்திற்கான நீர்வரத்து வாய்ப்பின்றி குளம் நிரம்பாமல் உள்ளது. இதனால் வடமதுரை நகரில் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் ஒரு பகுதி கழிவு நீர் சென்று தேங்குமிடமாக மாறியது மந்தைக்குளம்.
அதோடு நகரின் இறைச்சிக் கடை கழிவுகள், பன்றி வளர்ப்போர் என பலரும் குளத்தை அசுத்தமாக்கி வந்ததால் எப்போதும் இப்பகுதியில் துர்நாற்றமே காணப்பட்டது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் குளத்தை துார்வாரி சுற்றிலும் நடைபாதை, மக்கள் உட்காருவதற்கான சிமென்ட் இருக்கைகள், பாதுகாப்பு வேலி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மரங்கள் நடப்பட்டு பூங்கா போன்ற சூழல் உருவாகி நடைபயிற்சி செல்வோருக்கு சிறந்த ஒரு இடமாகவும் கிடைத்துள்ளது.
இதுநாள் வரை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நடைபயிற்சி செல்வோர் வாகன போக்குவரத்து மிகுந்த ரோட்டோரங்களில் விபத்து ஆபத்துடன் செல்லும் நிலை இருந்தது. தற்போது இங்கு பாதுகாப்பாக நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
பயனுள்ளதாக இருக்கும் - ஜி.நிருபாராணி, பேரூராட்சி தலைவர், வடமதுரை: மந்தைக்குளத்திற்கு வெளியே இருந்து உள்ளே நுழையும் முன்னர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.17 லட்சத்தில் தனி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியினர் துர்நாற்றப் பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது. நடைபயிற்சிக்கான பேவர் பிளாக் தளம் 1.75 கி.மீ., நீளம் கொண்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் மக்கள் பொழுது போக்கு பூங்கா போல பயன்படுத்துகின்றனர். தனி பூங்கா வசதி ஏதுமின்றி பரிதவித்த வடமதுரை மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மதிய நேரங்களில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்படுகிறது.
நிழல் தரும் மரங்கள் - எஸ்.கணேசன், பேரூராட்சி கவுன்சிலர், வடமதுரை: இக்குளம் முன்பு குப்பைகள் கொட்டும் இடமாகவும், பன்றிகள் வளரும் இடமாகவும் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. இப்பகுதி வழியே செல்லும் வி.கே.எஸ்.நகர், சங்கர் களம், ஏ.வி.பட்டி, நன்னிஆசாரியூர், போஜனம்பட்டி, அம்பலகாரன்பட்டி, தொட்டையகவுண்டனுார், குஞ்சாகவுண்டனுார் மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர். தற்போது இப்பிரச்னை இல்லை.
இங்கு பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பான வேலி உள்ளது. சுற்றிலும் வேம்பு, புங்கம், அலங்கார கொன்னை உள்ளிட்ட பலவகை நிழல் தரும் மரங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம்.