/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுகள் மூலம் இயற்கையை காக்கும் நண்பர் குழு
/
மரக்கன்றுகள் மூலம் இயற்கையை காக்கும் நண்பர் குழு
ADDED : டிச 30, 2024 06:29 AM

ரோட்டோரங்கள், பள்ளி, கல்லுாரிகள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து நத்தம் சுற்று வட்டார பகுதிகளை பாதுகாக்கின்றனர் இலக்கில்லா மரங்கள் நடும் நண்பர் குழுவினர்.
கரந்தமலை, சிறுமலை, அழகர்கோவில் மலை, கடவூர் மலை என மலைகள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் நகராக நத்தம் உள்ளது.
இயற்கைக்கு பஞ்ச மில்லாத இப்பகுதியில் இலக்கில்லா மரக்கன்றுகள் நடும் நண்பர் குழுவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் பள்ளிகள் தோறும் மரக்கன்றுகள் கொடுத்து, மாணவர்கள் இடையே மரக்கன்று நடும் பழக்கத்தை உருவாக்குவதுடன், பல்லாயிரம் மரக்கன்றுகளை நட்டு இயற்கைக்கு மேலும் மெரு கூட்டி உள்ளனர்.
இவர்கள் அரசு பள்ளிகள் கல்லுாரிகள், நீதிமன்ற வளாகம் கிராமங்களில் உள்ள குளக்க ரைகளில் பனை விதைகள் நடுவது, திருமண விழாக்களில் இலவச மரக்கன்றுகள் கொடுப்பது, தரிசாக உள்ள நிலங்களிலும் ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் பலன் தரும் மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை உள்ளிட்ட மரங்களை நட்டு வளர்க்கின்றனர்.
80க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து நத்தம், கோபால்பட்டி, செந்துறை, சிறுகுடி,அரவங்குறிச்சி, லிங்கவாடி, கோவில்பட்டி, வேலம்பட்டி என நத்தம் பகுதி மட்டுமல் லாது, திண்டுக்கல் காவலர் குடியிருப்பு, வடமதுரை, அய்யலுார், சாணார்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மரக்கன்று கள் வழங்கி நடும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
கிராமங்களில் அரசுப்பள்ளிமாணவர்களிடையே மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கும் எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில், இலவச மரக்கன்றுகள் வங்கி திட்டத்தையும் செயல்படுத்துகின்றனர். இதன்மூலம் நத்தம் பகுதியில் உள்ள 60க்கு மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளின் போது பல்லாயிரம் மரக்கன்றுகளை வழங்கி அதனை வளர்க்க அறிவுறுத்துகின்றனர்.
நடுவதே இலக்கு
ப.தேவேந்திரன், தலைவர்-, இலக்கில்லா மரங்கள் நடும் நண்பர் குழு, நத்தம்: அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டும். இயற்கையே நமது தெய்வம் என்பதை மனிதர்கள் மறக்க வேண்டாம்.
வருடத்திற்கு 10 ஆயிரம் மரங்கள் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறோம்.
அரசு கல்லுாரிகள்,பள்ளிகள்,மாணவர்களிடம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி அந்த மரங்களின் முக்கியத்துவத்தையும் கூறி, அவர்களின் கரங்களாலே இந்த பூமி தாயின் மடியில் மரங்களை வைத்து வளர்க்கிறோம்.
அதிகளவு நாட்டு மரங்களையும் நமது மரபு மரங்களையும் மட்டுமே வளர்க்கிறோம். ஒவ்வொரு கிராமங்களும் பசுமையாக வேண்டும். ஒவ்வொரு நகரங்களும் பசுமையாக வேண்டும். 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரங்களை இந்த பூமியில் விதைத்து வளர்த்துள்ளோம்.
நாய்களையும் காக்கிறோம்
கண்மணி அழகுராஜா, பசியில்லா நத்தம் அறக்கட்டளை, நத்தம்: 2017ல் 17 தன்னார்வலர்களுடன் தொடங்கிய இந்த அமைப்பு தற்போது நுாற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களை கொண்டு செயல்படுகிறது. சமூக சேவையைப் பாராட்டி வாழும் வள்ளலார், நாளைய கலாம், இளம் நம்மாழ்வார் விருது என பல்வேறு அமைப்புபூ களால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினர் மரக்கன்று நடுவதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்ற முதியோருக்கு உணவுகள் வழங்குவது, வறுமையில் வாடும்,ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, ரோட்டோரங்களில் சுற்றித்திரியும் நாய் குட்டிகளை மீட்டு அதற்கு, புதிய குடும்பத்தை உருவாக்கி காப்பது போன்ற பல்வேறு சமூக சேவைகளையம் செய்கின்றனர்.