/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரங்களால் கிராமத்தை பசுமையாக்கும் இளைஞர்கள் குழு
/
மரங்களால் கிராமத்தை பசுமையாக்கும் இளைஞர்கள் குழு
ADDED : ஆக 25, 2025 05:38 AM

திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் உள்ளது கல்வார்பட்டி. மாவட்ட எல்லையாக உள்ள இங்குள்ள ரங்கமலை கணவாய் தான் இதன் எல்லைப் பகுதியாகும். மலையடிவாரப் பகுதியாக உள்ளதால் மரம், செடி, கொடிகள் நிறைந்து குடிநீர் பிரச்னை ஏதுமின்றி மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றனர். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. கல்வார்பட்டியில் உள்ள இளைஞர்கள் குழு தங்களது சமூக சேவையை தொடரும் நிலையில் தற்போது கல்வார்பட்டி சுற்றுப் பகுதிகளில் 300 மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்கும் பணியிலும் முமு வீச்சில் ஈடுபடுகின்றனர். தங்களது கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்களே.
இளைஞர்களுக்கு ஓர் சல்யூட் செ.சக்திவேல், ஓய்வு ஆசிரியர்: கல்வார்பட்டியில் உள்ள இளைஞர்கள் குழுவினர் நல்ல முறையில் செயல் பட்டுவருகின்றனர். தற்போது கல்வார் பட்டியை சுற்றிலும் 300 மரக் கன்றுகளை நட்டு அதை ஆடு, மாடுகள் கடித்து விடாத வகையில் வளைகட்டி தினமும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான மரக்கன்றுகளை வாங்கி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். வாழும்போதே நமக்கு பின்னாலும் பெயர் சொல்லக்கூடிய வகையில் மரக் கன்றுகளை வைத்து மரமாக வளர்த்து விட வேண்டும் என்பதுதான் இவர்களது விருப்பம்.
நலமுடன் வாழ அவசியம் மரக்கன்று பி.கருப்பசாமி, அ.தி.மு.க., நிர்வாகி: கல்வார்பட்டி ரங்க மலை மலையடிவாரப் பகுதியில் உள்ளது.இங்குள்ளோர் நல்ல காற்று, நல்ல குடிநீர் என அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இங்கு ஏராளமான மரக்கன்றுகளை நட்டு கல்வார்பட்டி பகுதியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இளைஞர்கள் குழு சார்பில் கல்வார்பட்டி ஊராட்சி பகுதி முழுவதுமே இன்னும் சில ஆண்டுகளில் மரக்கன்றுகள் நடும் திட்டமும் உள்ளது. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதைப் போல் நல்ல காற்றுடன் நலமுடன் வாழ வேண்டும் என்றால் மரங்கள் அவசியம். மரக்கன்றுகளின் நடவும் அவசியம் என்றார்.