/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிலக்கோட்டை பயன் பெற புதிய கால்வாய் அமைக்க வேண்டும்
/
நிலக்கோட்டை பயன் பெற புதிய கால்வாய் அமைக்க வேண்டும்
நிலக்கோட்டை பயன் பெற புதிய கால்வாய் அமைக்க வேண்டும்
நிலக்கோட்டை பயன் பெற புதிய கால்வாய் அமைக்க வேண்டும்
ADDED : பிப் 05, 2024 12:45 AM

நிலக்கோட்டை : நிலக்கோட்டை பகுதியில் வறண்டு கிடக்கும் கண்மாய்களை வளப்படுத்த மருதாநதி, வைகை ஆற்றில் மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி நீரை விவசாயத்திற்கு திருப்பி விடுவதற்கு அரசு எதிர்கால திட்டத்தை வகுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை பெரிதும் கை கொடுக்கிறது. கடல் பகுதியில் எல் நினோ நிகழ்வுகளால் வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பொழியும். முன்பை போன்று பரவலாக பெய்யாமல் ஆங்காங்கே கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கு கடந்த மாதத்தில் சென்னையில் பெய்த மழையும் துாத்துக்குடியில் பெய்த கனமழையும் உதாரணமாகும். இப்படி அதிக மழை பெய்யும் காலங்களில் உபரி நீரை வறண்டு கிடக்கும் கண்மாய்களுக்கு திருப்பி விடுவதற்கு நீண்ட காலத் திட்டத்தை நிலக்கோட்டை ஒன்றிய பகுதிக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகள் பயனடையும் நிலை ஏற்படும்.
திட்டம் வேண்டும்
ஜவகர்,விவசாயி,கொங்கர்குளம்: வருங்காலங்களில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியிருக்கின்ற படியால் அதிக மழை பொழிவு காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் தண்ணீரை திருப்பி விட திட்டமிட வேண்டும்.
உபரி நீரை நிலக்கோட்டை பகுதிக்கு கொண்டு வருவதற்கு அரசியல்வாதிகள் நீண்ட காலத்திட்டத்தை வைகைப் பெரியாறு பாசன கால்வாயிலிருந்து புதிய கால்வாய் அமைத்து செங்கட்டான்பட்டி கண்மாயில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் குளத்துப்பட்டி, சீதாபுரம், கொங்கர்குளம் சிலுக்குவார்பட்டி, மன்னவராதி, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்புவதற்கு வழிவகை செய்யலாம். உபரி நீரை கொண்டு வருவதற்கு அப்போது விவசாயிகள் மறுப்பு சொல்ல மாட்டார்கள். நிலக்கோட்டை ஒன்றிய பகுதி நீடித்த வளர்ச்சி பெறுவதற்கு எதிர்கால திட்டத்தை வகுக்க வேண்டும்.
அரசுக்கு செலவு ஏற்படாது
சவுந்தரராஜன்,மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர்,நிலக்கோட்டை: வெங்கடாஸ்திரிகோட்டையில் மருதாநதி ரோடை கிடக்கும் இடத்தில் பெரிய தடுப்பணை ஒன்று ஏற்படுத்தி மல்லணம்பட்டி கரடு பகுதியில் உள்ள ஊரணியில் சேர்த்தால் அங்கிருந்து குளத்துப்பட்டி பெரிய குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும். குளத்துப்பட்டி கண்மாய் நிறைந்த பின் அங்குள்ள சில்லோடையிலிருந்து நிலக்கோட்டை கொங்கர்குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
பின் படிப்படியாக மன்னவராதி, மைக்கேல் பாளையம், சிலுக்குவார்பட்டி, கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். 3 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே புதிய கால்வாய் ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதால் அரசுக்கு அதிக செலவு ஏற்படாது.
மருதாநதி பாசன விவசாயிகளுடன் கலந்து பேசி, மழைக்காலங்களில் ஏற்படும் உபரி நீரை, நிலக்கோட்டை ஒன்றிய பகுதிக்கு கொண்டு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
தண்ணீர் கிடைப்பது அரிது
ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர், எத்திலோடு: நிலக்கோட்டையை ஒன்றிய பகுதிக்கு சிறுமலை ஆறு நீர் தேக்கம், மருதாநதி அணை, காமராஜர் நீர்த்தேக்கம், மஞ்சளாறு அணை ஆகியவை நீர் ஆதாரங்களாக இருந்தாலும் நிலக்கோட்டை ஒன்றியம் கடை மடையில் இருப்பதால் இப்பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
தென்பகுதியில் வைகை ஆறு, முல்லைப் பெரியாறு வாய்க்கால் செல்வதால் அப்பகுதியில் இருபோக விவசாயம் சாத்தியமாகிறது.
அதே சமயத்தில் வடபகுதியில் தோட்ட விவசாயம் நிறைந்தது. இருப்பினும் நஞ்சை பயிர்கள் விளைவித்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தற்போது நிலத்தை தரிசாக வைத்தனர்.
இந்த நஞ்சை நிலப் பகுதிகள் மீண்டும் உயிர் பெறுவதற்கு நிலக்கோட்டை ஒன்றிய கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு மருதாநதியிலிருந்து உபரி நீரை கொண்டு வருவதற்கு தமிழக அரசு எதிர்கால திட்டத்தை வகுக்க வேண்டும்.

