/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் சுணக்கம்
/
கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் சுணக்கம்
ADDED : அக் 03, 2024 06:15 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சுணக்கமாக நடந்து வருவதை துரிதப்படுத்த வருவாய்த்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கொடைக்கானலில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி செப். 25 முதல் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ஏரிச்சாலை சந்திப்பில் இருந்து மூஞ்சிக்கல் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஒரு பகுதியில் ரோட்டோரக் கடைகளை தானாகவே முன்வந்து பொதுமக்கள் அகற்றினர். ஏரிச்சாலை சந்திப்பிலிருந்து செண்பகனுார் இடையே நிரந்தர கட்டுமானத்துடன் வணிக ரீதியான ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. இதில் ஏரிச்சாலை சந்திப்பில் இருந்து மூஞ்சிக்கல் வரை மட்டுமே தற்காலிகமாக வருவாய்த்துறையினர் அளவீடு செய்து குறியிட்டுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளை மட்டுமே நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு வார காலத்தில் துரிதமின்றி அகற்றி வருகின்றனர். ரோட்டோர நிரந்தர கட்டுமானங்களை அகற்ற இதுவரை முறையான நோட்டீஸ் வழங்கப்படாத நிலை உள்ளது. நெடுஞ்சாலை துறை மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துவக்கி உள்ள நிலையில் நகராட்சி ,நீர்வளத்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாத நிலை உள்ளது. இத்துறைகளும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வந்தால் மட்டுமே முழுமை பெறும்.
நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில்,' ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓராண்டாக அளவீடு செய்து வருவாய்த்துறையினர் தகவல் அளிக்க கோரி வருகிறோம்.வருவாய்த் துறையினர் அளவீடு மட்டும் செய்து அதன் அறிக்கையை தங்களுக்கு அனுப்பாத நிலையில் ஆக்கிரப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு நிரந்தர கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
ஆர்.டி.ஓ., சிவராம் கூறுகையில்,'' நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவரம் அளிக்க சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் பாரபட்சம் இன்றி அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் ''என்றார்.