ADDED : ஏப் 20, 2025 04:17 AM

திண்டுக்கல் : '' திண்டுக்கல் மாவட்டத்தில் 96,649 விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டேக் திட்டத்தின் வாயிலாக தனி குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக'' மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டியன் தெரிவித்தார்
மாவட்டத்தில் பயிர் சாகுபடி எந்தளவில் உள்ளது...
14,240 ஹெக்டரில் நெற்பயிர் , 75,760 ஹெக்டரில் சிறுதானியம், 14,840 ஹெக்டரில் பயறு , 4,120 ஹெக்டரில் எண்ணெய்வித்து , 2,007 ஹெக்டேரில் பருத்தி , 1340 ஹெக்டரில் கரும்பு என்ற அளவில் 2024--25ல் பயிர் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. உணவுதானியபயிர்கள் 1,04,840 ஹெக்டரில் பயிரிடப்பட்டுள்ளது.
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் செயல்பாடு...
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மாநில அரசின் நிதியின் மூலம் 2023-24 நிதியாண்டில் மானாவாரி நிலங்களில் உற்பத்தியை ஊக்குவிக்க இயற்கை உரம், பசுந்தாள் உர விதைகள் விநியோகம், மண்புழு உரப்படுக்கைகள் வழங்குதல், இயற்கை உரம் தயாரித்தல் மையம் அமைத்தல், வேப்பமரங்கள் நடுதலை ஊக்குவித்தல்,அங்கக வேளாண்மைக்கான மாதிரி பண்ணை அமைத்தல் இனங்களில் ரூ.1.48 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விதைகள் விநியோகிக்கப்படுகிறதா ...
நெல் ஜெயராமன் மரபுசாரா நெல் ரகங்கள் திட்டத்தில் பாரம்பாரிய நெல் விதைகள் 1.5 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உயிர்பூச்சிக் கொல்லி பண்புடைய தாவரங்களில் நொச்சி, ஆடாதொடா, நடவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
மண்வள அட்டை வழங்கப்படுகிறதா...
மத்திய மாநில அரசு பகிர்வு நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த உர மேலாண்மை வழியாக ரசாயன பயன்பாட்டினை குறைக்க மண்வள அட்டை 1,00,500 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களுக்கு திரவ உயிர் உரம் 14.85 லிட்டர் வழங்கப்பட்டுள்ளது. பாரம்பாரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் உயிர்மவேளாண்மையை 400 ஹெக்டரில் 67 லட்சத்தில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
அக்ரி ஸ்டேக் பதிவு , பி.எம்., கிஷான் திட்டம் எந்தளவில் உள்ளது...
பிரதம மந்திரி கிஷான் நிதிஉதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 75,930 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 96,649 விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டேக் திட்டத்தின் வாயிலாக தனி குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் காடுகள் திட்டத்தில் புதிய நாற்றாங்கால்களை உருவாக்குதல்,பழைய நாற்றாங்கால்களை மேம்படுத்த ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நீடித்த நிலையான வருமானம் தரும் 500 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தரிசுநில தொகுப்பு மேம்பாடு திட்ட செயல்பாடு...
இத்திட்டமானது 2021--22ல் ஆத்தூர், சித்தரேவில் செயல்படத் துவங்கியது. இதன் மூலம் தரிசு நிலங்களானது விளை நிலங்களாக மாற்றப்பட்டு உணவு பயிர்கள் ,பழ வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. வேளாண்துறையின் மூலமாக பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 11.46 ஏக்கர் தரிசு நிலத்தில் முறைப்படி முட்புதர்கள் அகற்றப்பட்டு பொறியியல் துறை மூலமாக ஆழ்துளை கிணறு அமைத்து தோட்டக்கலைத் துறையின் மூலமாக நுண்ணீர்பாசனம் நிறுவப்பட்டு கடலை, பருத்தி, உளுந்து, போன்ற பயிர் வகைகளும், மா, தேக்கு போன்ற மர வகைகளும்பயிரிடப்பட்டுள்ளன.
கிராம வளர்ச்சிக்கு இடுபொருட்கள் விநியோகம் நடக்கிறதா...
இத்திட்டத்தின் மூலமாக 2021 முதல் 2023 வரை 1,11,840 தென்னை நாற்றுகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 621 இரும்புச்சட்டி, மண்வெட்டி, கடப்பாறை போன்ற வேளாண் உபகரணங்களும், 3, 254 விசைத்தெளிப்பான்கள்,634 தார்பாலின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றார்.

