/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்வோரை தடுக்க குழிதோண்டி பேரிக்கார்டுகள் அமைப்பு
/
ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்வோரை தடுக்க குழிதோண்டி பேரிக்கார்டுகள் அமைப்பு
ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்வோரை தடுக்க குழிதோண்டி பேரிக்கார்டுகள் அமைப்பு
ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்வோரை தடுக்க குழிதோண்டி பேரிக்கார்டுகள் அமைப்பு
ADDED : நவ 11, 2024 04:46 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி ரோட்டிலிருந்து கரூர் ரோட்டிற்கு செல்லும் பணிகள் முடியாத ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை தடுக்க வேறு வழி தெரியாமல் அதன் நுழைவு பகுதிகளின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையினர் குழிதோண்டி பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் திருச்சி ரோட்டிலிருந்து கரூர் ரோட்டிற்கு செல்ல 5 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இப்பணிகள் மெதுவாக ஆமை வேகத்தில் நடந்ததால் வேடசந்துார்,கரூர் மார்க்கமாக செல்லும் வாகனஓட்டிகள் திருச்சி ரோடு காந்திஜிநகர் வழியாக கரூர் ரோட்டிற்கு ஆண்டுக்கணக்கில் சென்று வந்தனர்.
2024 மே மாதத்திலிருந்து கரூர் ரோடு வழித்தடத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தாமாகவே ரயில்வே சுரங்கபாதை பணிகள் முடிவதற்கு முன்பே பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அவ்வழியில் செல்ல தொடங்கினர். நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சுரங்கபாதை பணிகள் இன்னும் முடியாததால் மக்கள் செல்ல வேண்டாம் எனக்கூறி இருபுறமும் பேரிக்கார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்தனர்.
அதையெல்லாம் பொருட்டாக நினைக்காத வாகனஓட்டிகள் பேரிக்கார்டுகளை தாமாகவே அகற்றி அவ்வழியில் சென்றனர். இப்பாதையில் வாகன ஓட்டிகள் சென்ற நாளிலிருந்து நேற்று வரை அதன் நடு பகுதியில் தண்ணீர் தேங்கி தான் கிடக்கிறது. இதை தினமும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு ஆள் நியமித்து அகற்றி வருகின்றனர். அவ்வப்போது பெய்யும் மழை நேரங்களில் பெரும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்து வாகன ஓட்டிகளை அவ்வழியில் செல்லாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சுரங்கபாதையின் அருகிலேயே நிற்கின்றனர்.
இதோடு மட்டுமில்லாமல் பணிகள் முடிவதற்கு முன்பே சுரங்கபாதையின் பல பகுதிகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இது திண்டுக்கல் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. மதுரையிலிருந்து மண்டல நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரயில்வே சுரங்கபாதையில் நிரந்தரமாக தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தற்போது திண்டுக்கல்லில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கரூர்ரோடு ரயில்வே சுரங்கபாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யாரும் பாதிக்கப்பட்டால் அவ்வளவு தான் எனக்கருதிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,வேறு வழி தெரியாமல் நேற்று காலை திருச்சி ரோடு,கரூர் ரோடு வழியாக வரும் வாகன ஓட்டிகள் சுரங்கபாதை வழியாக செல்ல முடியாத வகையில் அதன் நுழைவு பகுதியில் 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டி பேரிக்கார்டுகள் அமைத்துள்ளனர். இதைப்பார்க்கும் மக்கள் அதிகாரிகளை வசைபாடியபடி மாற்று பாதையில் செல்ல தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் லட்சுமி கூறியதாவது: கரூர்ரோடு ரயில்வே சுரங்கபாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்குகிறது. அதை தினமும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். முழுமையாக பணிகள் முடிந்தபின் தண்ணீர் தேங்காமல் இருக்கும். தற்போது அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகளை தடுக்க குழி தோண்டி பேரிக்கார்டுகள் அமைத்துள்ளோம் என்றார்.