/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புண்ணியதீர்த்தங்களில் ஆடி அமாவாசை வழிபாடு
/
புண்ணியதீர்த்தங்களில் ஆடி அமாவாசை வழிபாடு
ADDED : ஜூலை 25, 2025 02:52 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயில் ஸ்தலங்களில் குவிந்தனர்.
மாதம்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகளில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.
இதுபோன்ற காலங்களில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் கடமையாக கொண்டுள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் கோபாலசமுத்திர குளத்தில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தனர்.
வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். கோட்டை குளம், குடகனாற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்தனர்.
மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயில், அஞ்சநேயர், அபிராமி அம்மன், கோட்டைமாரியம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பழநி : சண்முக நதிக்கரையில் அவரவர் குல வழக்கப்படி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் , பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர். வீடுகளில் முன்னோர்களின் படங்களை வைத்து வழிபட்டனர்.
சின்னாளபட்டி : அக்கரைப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை குகையில் சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை விழா நேற்று முன்தினம் துவங்கியது. அடிவாரம் மலை குகை கோயில் ஆகிய இடங்களில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் பறவை காவடி, பால் காவடி, நீண்ட அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கொடைக்கானல் : கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன், பூம்பாறை குழந்தை வேலப்பர், பண்ணைக்காடு மயான காளியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன், கானல்காடு பூதநாச்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வடமதுரை : காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம், திருமஞ்சனம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன.
பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.