/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆடி கார்த்திகை; கோயில்களில் சிறப்பு வழிபாடு பழநியில் குவிந்த பக்தர்கள்
/
ஆடி கார்த்திகை; கோயில்களில் சிறப்பு வழிபாடு பழநியில் குவிந்த பக்தர்கள்
ஆடி கார்த்திகை; கோயில்களில் சிறப்பு வழிபாடு பழநியில் குவிந்த பக்தர்கள்
ஆடி கார்த்திகை; கோயில்களில் சிறப்பு வழிபாடு பழநியில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 21, 2025 02:26 AM

பழநி: பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக மலைக்கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆங்காங்கே நிறுத்தி அனுப்பப்பட்டனர். ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக செயல்படவில்லை.
இதனால், வின்ச் ஸ்டேஷனில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அருள்ஜோதி வீதி, குளத்து ரோடு உள்ளிட்ட முக்கிய நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் பழநி பஸ் ஸ்டாண்டில் அதிக பக்தர்கள் பஸ்ஸிற்காக காத்திருந்தனர். ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் இலவச பிரசாதம், பஞ்சாமிர்தம், அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்பட்டது. மாலையில் குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது.
வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசித்தனர்.
அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்கு பூஜை, பஜன் நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் கிருத்திகை விழாவில் மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு, வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.