ADDED : ஆக 10, 2025 02:50 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி நேற்று திண்டுக்கல் ஆர். எம். காலனியில் மாநகராட்சி சமுதாய கூடத்தில் ஆயிர வைசியர் சமூகத்தினர் பூணுல் அணிந்து கொண்டனர்.
இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சின்னாளபட்டி: அக்கசாலை சித்தி விநாயகர் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுல் பண்டிகை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பூணூல் அணிந்து வழிபாடு செய்தனர்.
சவடம்மன் கோயில், பாதாள பேச்சியம்மன் கோயில், செக்காபட்டி உள்ளிட்ட இடங்களில் ஆவணி அவிட்ட சிறப்பு பூஜைகளுடன் பூணுால் பண்டிகை கொண்டாடப்பட்டது.
பழநி : அர்ச்சகர் ஸ்தானிக சங்கத்தின் சார்பில் பிராமண சமுதாயத்தினர் தெற்கு ரத வீதியில் உள்ள சங்க கட்டடம், தெற்கு ரத வீதி வாசுகி மஹாலில் ஆரிய வைசிய சமுதாயத்தினர், பழநி டவுன் விஸ்வ பிராமண மகா ஜன சங்கத்தினர் பூணுால் மாற்றிக்கொண்டனர்.
நத்தம் : விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள விநாயகர் கோயிலில் ஏராளமானோர் ஒன்றுகூடி பூணுால் மாற்றி அணிந்து கொண்டனர். தொடர்ந்து காயத்ரி மந்திரங்கள் படிக்க வழிபாடு நடந்தது.