/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதால் விபத்து அபாயம்
/
சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதால் விபத்து அபாயம்
ADDED : செப் 30, 2025 04:31 AM

பழநி: பழநி சுற்றுவட்டார முக்கிய சாலை ஓரங்களில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை கொட்டுவதால் நாய் தொல்லை, தீ யால் ஏற்படும் புகை மண்டலத்தாலும் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பழநி சுற்றுப்பகுதிகளில் குப்பையை சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இறைச்சி கழிவுகள், கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு, நாய் தொல்லை அதிகரிக்கிறது. நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மீன், மாடு, ஆடு, கோழி, கருவாடு போன்ற இறைச்சிக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இறைச்சி கடைகளின் இறைச்சி கழிவுகள் சாலையோரம் குப்பையுடன் சேர்த்து கொட்டப்படுகிறது. இதை சாப்பிட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. திடீரென வாகனங்களுக்கு இடையே வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு டூவீலரில் செல்வோர் பெரிதளவில் பாதிக்கின்றனர்.
நிலை தடுமாறும் சூழல் வெங்கடேஷ், சமூக அலுவலர், நெய்க்காரப்பட்டி: பழநி அய்யம்புள்ளி ரோடு, பழநி கொழுமம் சாலை, புது தாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு ஆகிய சாலைகளின் ஓரங்களில் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் குப்பை கொட்டப்படுகின்றன. கொழுமம் சாலையில் சர்க்கரை கவுண்டன் குளம் பகுதியில் குப்பை கிடங்கு போல்குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. வெயில் நேரத்தில் திடீரென குப்பை தீப்பற்றி எரிந்து சாலைகளில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. குப்பையால் ஏற்படும் புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் துர்நாற்றம் ஏற்படுகிறது. டூவீலரில் செல்வோர் மூக்கை மூடி செல்வதால் நிலை தடுமாறும் சூழல் உருவாகிறது.
முகம் சுளிக்கிறார்கள் ஜெகன், ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர்: உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக குப்பை கொட்ட இடம் இல்லாததால் சாலை ஓரங்களில் குப்பை கொட்டி செல்கின்றனர். இதனால் பழநி நகருக்குள் வரும் பக்தர்கள் ,பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. தெருநாய்கள் குப்பை கொட்டும் இடங்களில் இருந்து திடீரென சாலைகள் புகுவதால் டூ வீலர் , நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உட்பட அனைவரும் மனசங்கடத்திற்கு ஆளாகின்றனர் மேலும் விபத்தால் உடல் ஊனம் , தலைக்காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.