/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சித்தரேவு மலை ரோட்டில் தடுப்பின்றி விபத்து
/
சித்தரேவு மலை ரோட்டில் தடுப்பின்றி விபத்து
ADDED : செப் 21, 2025 04:33 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி சித்தரேவு மலை ரோட்டில் தடுப்புச்சுவரின்றி வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
தாண்டிக்குடி மலைப்பகுதிக்கு பிரதான ரோடாக சித்தரேவு புல்லாவெளி 13. கி.மீ., ரோடு உள்ளது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் இந்த ரோடு குறுகிய ஒரு வழிப்பாதையாகும்.
இதில் கொண்டை ஊசி வளைவு, ஆபத்தான பள்ளதாக்குகள் உள்ளன. ஆத்துார் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் உள்ள இம்மலை ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன் கனமழையின் போது மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் கட்டமைக்கப்பட்டன.
இவை முழுமை பெறாமல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டன. விபத்து அபாயமுள்ள வளைவு, பள்ளதாக்கு பகுதி வெறுமனே விடப்பட்டன. கண்துடைப்பாக அமைத்த இரும்பு கிராஸ் பேரியர்களும் வலுவிழந்து ஆங்காங்கே காட்சி பொருளாகி உருக்குலைந்துள்ளது. மீனாட்சி ஊத்து, தண்ணீர்பாறை, முருகன் கோயில், நாடுகண்டான் புளிய மரம் பகுதியில் ஆபத்தான பள்ளதாக்கில் தடுப்புச்சுவரின்றி நாள்தோறும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன.
இவ்விடங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்கும் நிலையில் திக் திக்குடன் கடக்கும் நிலை உள்ளது. மலை ரோட்டில் விபத்து அபாய பகுதியை ஆய்வு செய்து தடுப்புச்சுவர் ,ரோலிங் கிராஸ் பேரியர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.