/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துார் காக்காத்தோப்பூர் பிரிவில் மேம்பாலம் இன்றி விபத்து
/
வேடசந்துார் காக்காத்தோப்பூர் பிரிவில் மேம்பாலம் இன்றி விபத்து
வேடசந்துார் காக்காத்தோப்பூர் பிரிவில் மேம்பாலம் இன்றி விபத்து
வேடசந்துார் காக்காத்தோப்பூர் பிரிவில் மேம்பாலம் இன்றி விபத்து
ADDED : நவ 07, 2024 02:09 AM

வேடசந்துார்: திண்டுக்கல் வேடசந்துார் நெடுஞ்சாலை காக்காத்தோப்பூர் பிரிவு அருகே மேம்பாலம் வசதி இல்லாததால் விபத்துக்கள் தொடர்கிறது. இங்கு மேம்பாலம் வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு வழியாக வேடசந்துார் செல்லும் வாகனங்கள் காக்காத்தோப்பூர் பிரிவு அருகே திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையை குறுக்காக கடக்கிறது. இதனால் விபத்துக்கள் தொடர் கதையாக நடக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவழி சாலையாக இருந்த இந்த நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இதனால் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விரைவாக செல்லலாம் என்றாலும் ரோட்டை குறுக்காக கடக்கும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.
நான்கு வழி சாலை அமைத்த புதிதில் சாலையை கடக்க முயற்சித்த பலர் கருக்காம்பட்டி பைபாஸ், காக்காத்தோப்பூர் பைபாஸ் பகுதியில் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகினர். பலர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் இந்த இரு இடங்களிலும் மேம்பாலம் வசதி அவசியம் தேவை என்ற கோரிக்கை தொடர்கிறது. கருக்காம்பட்டி பைபாஸ் ரோட்டில் புதிதாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயணம் தொடர்கிறது. காக்காத்தோப்பூர் பைபாஸ் ரோட்டில் மட்டும் மேம்பாலம் இல்லாததால் விபத்துக்கள் தொடர் கதையாகவே உள்ளது. கேட்டால் விரைவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்கின்றனர். ஆனால் புதிய மேம்பாலம் அமைத்த பாடு இல்லை. இதனால் தாடிக்கொம்பிலிருந்து பழநிரோட்டில் செல்ல வேண்டிய நுாற்பாலை , பள்ளி கல்லுாரி வாகனங்கள் , வேடசந்துார் நகர் பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதே போல் தான் ஒட்டன்சத்திரத்திலிருந்து வரும் வாகனங்களும் தாடிக்கொம்பு நோக்கி செல்வதில் சுற்றி செல்கின்றன. இப்பகுதி மக்களின் நலன் கருதி காக்காத்தோப்பூர் பிரிவில் புதிதாக மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.
100க்கு மேற்பட்ட விபத்து
பி.மணிவேல், விவசாயி, சத்யநாதபுரம் : நான்கு வழிச்சாலை அமைத்து 20 ஆண்டுகள் இருக்கும். இதுவரை நுாற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. இருந்தாலும் இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட இன்னும் முயற்சி எடுக்கவில்லை. நூற்றுக்கணக்கான மில் தொழிலாளர்கள், நூற்பாலை வாகனங்கள் செல்கின்ற இந்த வழியில் மேம்பாலத்தை அமைக்க வேண்டும்.
விபத்துக்கு அளவே இல்லை
பி.நடராஜன், சலூன் கடை, காக்காத்தோப்பூர்: இந்த இடத்தில் நடக்கும் விபத்துக்கு அளவே இல்லை.பல வாகனங்கள் உடைந்து சிதறி உள்ளன. உயிரிழப்புக்களும் கூடுதலாக உள்ளன. அரசு , தனியார் பஸ்கள் பல, இந்த இடத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளன. இங்குள்ள உயர் கோபுர மின்விளக்கு கூட பலமுறை சேதமடைந்துள்ளது. ஒடிந்தும் விழுந்துள்ளது.
கவனமாக செல்லுங்க
ஆர்.செல்வராஜ், விவசாயி, வெரியம்பட்டி: வேடசந்துாரில் இருந்து திண்டுக்கல் செல்லும் போதும் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் போதும் காக்காதோப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் மிக கவனமாக செல்ல வேண்டியுள்ளது. வெளியூர் வாகனங்கள் இந்த இடத்தில் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இதனால் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் ,நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் விரைந்து செயல்படுத்த வேண்டும்.