/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் -மூலச்சத்திரம் ரோட்டில் தொடரும் விபத்துக்கள்
/
திண்டுக்கல் -மூலச்சத்திரம் ரோட்டில் தொடரும் விபத்துக்கள்
திண்டுக்கல் -மூலச்சத்திரம் ரோட்டில் தொடரும் விபத்துக்கள்
திண்டுக்கல் -மூலச்சத்திரம் ரோட்டில் தொடரும் விபத்துக்கள்
ADDED : ஆக 07, 2025 07:04 AM

ரெட்டியார்சத்திரம் : திண்டுக்கல் -மூலச்சத்திரம் நான்கு வழிச்சாலையில் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் வாடிக்கையாகிறது.
ஆண்டுதோறும் பழநி தைப்பூச விழாவிற்காக தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்ட பக்தர்கள் நுாற்றுக்கணக்கான கிலோமீட்டர் துாரம் பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசம் மட்டுமின்றி பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை என பெரும்பாலான விசேஷ நாட்களிலும் தரிசனம் செய்ய பக்தர்களின் பாதயாத்திரை கணிசமான அளவில் தொடர்கிறது. மாவட்டத்தில் திண்டுக்கல் -ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் 63 கிலோமீட்டர் துாரத்திற்கு ரோட்டின் ஓரமாக பேவர் பிளாக் கற்களால் தனி நடைபாதை அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி பெரும்பாலான இடங்களில் நடைபாதை சேதமடைந்தது. சில மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணி நடந்தபோதும் அதிகாரிகள் அலட்சியத்தால் பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
வழித்தட கிராமங்களில் தனியார் கடைகள், வீடுகளுக்கான முன் பகுதியை நீட்டித்து ஆக்கிரமித்து உள்ளனர். சில இடங்களில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இத்தடத்தை 4 வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி பல மாதங்களாகிறது. செம்மடைப்பட்டி பகுதியில் ஆமை வேகத்தில் நடப்பதால் தற்போதுவரை பணி முழுமை பெறவில்லை.அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் பல இடங்களில் குறுகிய அகலம், சேதமடைந்த மழைநீர் வெளியேற்ற குழாய்கள், எச்சரிக்கை தடுப்பு இல்லாமல் துண்டிக்கப்பட்ட பாதயாத்திரை வழித்தடம் போன்ற பாதுகாப்பற்ற பணிகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வழித்தடத்தின் பயன் முழுமையாக பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் இப்பிரச்னைகளை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகலம் குறுகிய நடைபாதை
கணபதி, விவசாயி, பலக்கனுாத்து : பெரும்பாலான இடங்களில் போதிய அகலமின்றி குறுகலாக பாதயாத்திரை நடைபாதை அமைத்துள்ளனர். பல இடங்களில் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு, தடுப்புகள் இல்லை. இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பாதயாத்திரை வழித்தடத்தில் ஓட்டல், டீக்கடை, உணவு பலகாரம், பழங்கள், இளநீர் விற்பனை என வழி நெடுகிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம். தார் ரோட்டின் விளிம்பு வரை கூடாரம், வாடிக்கையாளர்களுக்கான நாற்காலிகள் என ஆக்கிரமித்து உள்ளனர். சீசன் நேரங்கள் மட்டுமின்றி பிற நேரங்களிலும் பாதசாரிகள் பக்தர்கள் நடுரோட்டில் நடப்பதால் விபத்துக்கள் தொடர்கிறது.
கண்காணிப்பு இல்லை புதுமைராஜா, பா.ஜ., ஒன்றிய பார்வையாளர், ரெட்டியார்சத்திரம்: திருப்பூர், கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு பூ, காய் கனி ஏற்றிய சரக்கு வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. இவற்றின் அசுர வேக பயணம் விபத்து அபாயத்தில் நீடிக்கிறது போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. நாளுக்கு நாள் இத்தடத்தில் கனரக வாகன போக்குவரத்து வெகுவாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப ரோட்டின் விரிவாக்கப் பணி நடந்தபோதும் அதிகாரிகள் அலட்சியத்தால் விபத்துக்கள் தாராளமாக தொடர்கிறது.
குறுகிய திருப்பங்களில் எதிர்வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்கான குவி கண்ணாடிகள் கூட இல்லை. பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் கடந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். பலக்கனுாத்து,
செம்மடைப்பட்டி பகுதியில் பல மாதங்களாகியும் 4 வழிச்சாலை பணி முடியவில்லை. குறுகிய ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், நடுரோடு வரை செல்லும் பக்தர்களால் விபத்துக்கள் தொடர்கிறது. ரோந்து, கண்காணிப்பில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.-

