/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனவிலங்குகளால் பாதிக்கிறது விவசாயம்
/
வனவிலங்குகளால் பாதிக்கிறது விவசாயம்
ADDED : ஜூலை 27, 2025 04:25 AM
கொடைக்கானல்: வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக ' கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சொர்ணலதா, வனவர்கள் முத்துக்குமார், சுபாஷ், மின்வாரியஉதவி பொறியாளர் பிரபு கலந்து கொண்டனர்.
விவசாயிகள் விவாதம் முத்துமாணிக்கம், மன்னவனுார் : காட்டுப்பன்றி , காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. செய்வது அறியாது தவிக்கிறோம்.
வனவர் : வன விலங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
பழனிசாமி, கவுஞ்சி : வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்க பொதுமக்கள் செல்லும் நிலையில் வனத்துறை தடை விதிக்கின்றனர். அதே நிலையில் வனத்தில் உள்ள தடை செய்யப்பட்ட போதை காளான்களை பறிப்பதற்கு வனத்துறையினர் துணை போகின்றனர்.
வனவர் : அவ்வாறாக ஒன்றும் இல்லை.அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்துகிறோம்.
சந்திரசேகர், பழம்புத்துார் : மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திர பயன்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையில் மேல் மலைப் பகுதியில் தாராளமாக செயல்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ.. : வி.ஏ.ஓ .,விற்கு தெரிவிக்கப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்திரசேகர், பழம்புத்துார் : தோட்டக்கலைத் துறையில் உரம் மருந்து மானியங்கள் சரிவர விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் : மேல்மலை பகுதியில் பூண்டு மானியத்திற்கு ஏராளமான விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முத்துமாணிக்கம், மன்னவனுார் : ரோட்டோர செடிகள்,போக்குவரத்துக்கு இடையூறான மரங்களை அகற்றுவதற்கு வனத்துறை முட்டுக்கட்டையாக உள்ளது.
ஆர்.டி.ஓ. : வனத்துறை அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனிசாமி ,கவுஞ்சி : மேல்மலை பகுதியில் மின்னழுத்த குறைபாடும் மின்தடையும் நீடிக்கிறது.இதை சரி செய்ய புகார் அளித்தும் மின்வாரியத்தினர் கண்டு கொள்வதில்லை. மாறாக அனுமதியற்ற தங்கும் விடுதிகளுக்கு முறைகேடாக மின் சப்ளை அளிக்கின்றனர்.
ரஞ்சித்குமார், பூலத்துார்: புதிதாக நிலம் வாங்கியவர்கள் பூர்வீகமாக நிலம் வைத்துள்ளவர்களுக்கு பாதை வழங்க மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதித்துள்ளோம். ஆர்.டி.ஓ.,: சம்பந்தப்பட்ட இடத்தை ஒரு சில தினங்களில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்திரசேகர்,பழம்புத்துார் : மேல்மலை பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன்களை திருப்பி செலுத்திய போதும் விவசாய கடன் வழங்க மறுக்கின்றனர்.கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களே மீண்டும் பணியமர்த்தி முறைகேடுகள் நடக்கின்றன. தற்போது வரை கடன் வழங்காத நிலை உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆர்.டி.ஓ. : கூட்டுறவு வங்கி நிர்வாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.