/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., சுணக்கம் : தி.மு.க., விறுவிறு
/
அ.தி.மு.க., சுணக்கம் : தி.மு.க., விறுவிறு
ADDED : ஜூலை 20, 2025 05:03 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் அ.தி.மு.க., செயல்பாடு சுணக்கமடைந்து தி.மு.க., சுறுசுறுப்பை எட்டியுள்ளது.
இம்மலைப் பகுதியில் அ.தி.மு.க., கீழ்மலை, மேல்மலை, கொடைக்கானல் நகரம், பேரூராட்சி செயலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் கொடைக்கானல் நகரம் தவிர்த்து கீழ் மலை, மேல்மலை ஒன்றிய செயலாளர்களின் செயல்பாடுகள் தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இரு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் நான்கு செயலாளர்களை நியமித்து களப்பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. அதே நிலையில் அ.தி.மு.க., தரப்பில் இரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்யப்பட்ட போதும் கட்சித் தொண்டர்களை அரவணைப்பது, கட்சியின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்பது தொண்டர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.தி.மு.க.,வினர் தற்போதே வீடு,வீடாக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அவர்களது அடிப்படை பிரச்னைகள் குறித்து களப்பணிகளை துவக்கி நிவர்த்தி செய்கின்றனர்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்களை பொறுத்தமட்டில் கட்சியினருடன் தொடர்பில்லாத நிலை, கட்சிக் கூட்டம், விழாக்களில் கலந்து கொள்ளாது காபந்து செயலர்களாக செயல்படுவதாக தொண்டர்கள் குமறுகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தொண்டர்கள் சோர்வடைந்து விரக்திக்கு செல்லும் அபாயம் உள்ளது.