/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதர் மண்டிய கால்வாய்; வறண்டு கிடக்கும் ஓட்டக்குளம்
/
புதர் மண்டிய கால்வாய்; வறண்டு கிடக்கும் ஓட்டக்குளம்
புதர் மண்டிய கால்வாய்; வறண்டு கிடக்கும் ஓட்டக்குளம்
புதர் மண்டிய கால்வாய்; வறண்டு கிடக்கும் ஓட்டக்குளம்
ADDED : டிச 20, 2025 06:08 AM

ஒட்டன்சத்திரம்: புதர்கள் மண்டிய நீர் வரத்து கால்வாயால் ஓட்டக்குளம் நீர் வரத்தின்றி வறண்டு கிடப்பதால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
பரப்பலாறு அணையில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் ஓட்டக்குளம் பல ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த குளத்தை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. பல குளம் நிரம்பும்போது கிணறுகள், போர்வெல்களுக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. சுற்றிய போர்வெல்கள், கிணறுகளுக்கு முக்கிய நீர் ஆதாரம் இந்த குளமே. பெருமாள் குளத்தில் இருந்து உபரி நீரை பெறுவதன் மூலம் இக்குளம் நீர் வரத்தை பெறுகிறது. குளங்களுக்கு தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை மூலம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இது துார்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. மேடான பகுதி என்பதால் 10 அடி முதல் 20 அடி ஆழம் வரை வாய்க்கால் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் போது மண் சரிந்து விழுந்து வாய்க்கால் மேடாகி புதர் மண்டுகிறது. இதன் காணமாக ஓட்டக்குளம் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. இதை கருதி உடனடியாக கால்வாயை துார்வார நடவடிக்கை எடுப்பதோடு மேடு பள்ளங்களை சீர்படுத்தி சிமென்ட் தளத்துடன் கான்கிரீட் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு குளத்தில் முளைத்துள்ள செடி கொடிகளையும் அகற்ற வேண்டும்.
துார் வாரலாமே ஹரிஹரன், விவசாயி: பரப்பலாறு அணை தண்ணீர் பெருமாள் குளம் வந்து அது நிரம்பி மறுநாள் செல்லும்போதுதான் குளத்திற்கு நீர் கிடைக்கிறது. பல ஆண்டுகள் பெருமாள் குளம் நிரம்புவதே இல்லை. அந்த காலங்களில் இந்த குளம் வறண்டே காணப்படும். குளங்களுக்கு வரும் வாய்க்காலை உடனடியாக சீரமைக்கவும் வருங்காலத்தில் சிமென்ட் வாய்க்காலாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறையினர் வாய்க்காலை துார்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
செடி, கொடிகளை அகற்றுங்க பழனிமுத்து, விவசாயி: குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி குளக்கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் உள்ள செடி கொடிகளையும் அகற்ற வேண்டும். பெருமாள்குளத்தில் இருந்து ஓட்டக்குளம் வரும் வாய்க்கால், ஓட்டக்குளத்தில் இருந்து பாப்பான் குளம் ,அங்கிருந்து காவேரியம்மாபட்டி பெரிய குளத்திற்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலையும் துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

