/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறமைகளை வெளிப்படுத்தும் ஆண்டு விழா
/
திறமைகளை வெளிப்படுத்தும் ஆண்டு விழா
ADDED : ஜன 26, 2025 04:44 AM
திண்டுக்கல்: பள்ளியில் படிப்பு மட்டுமன்றி மாணவர்களின் கலை நயம், திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர். அப்படிப்பட்ட நிகழ்வுதான் திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேறியது. இதில் பங்கேற்றவர்கள் மனம் திறந்ததாவது...
அன்பு, அறிவு, ஆற்றல்
எம்.புருஷோத்தமன், பள்ளி சேர்மன்: சுவாமி விவேகானந்தரின் வழியில் மனிதனை உருவாக்கும் கல்வியை குறிக்கோளாகக் கொண்டு 33 ஆண்டுகளாக தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பள்ளிகளை தொடங்கி நடத்துகிறோம்.
பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளும் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய கோட்பாடுகளை முன்னிறுத்தியே நடக்கிறது.
கல்வியில் ஒழுக்கம் மிக முக்கிய இடம் வகிக்கிறது. வகுப்பறை கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் உடற்கல்விக்கும் அளிக்கப்படுகிறது. இந்திய அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கு பெறுவதே இதற்கு சான்றாகும்.
பல்வேறு சவால்கள்
மங்கள்ராம், பள்ளி செயலாளர்: இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. இளம் வயது முதலே மாணவர்களை இதற்காக தயார் செய்கிறோம்.
அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளுக்கு 6ம் வகுப்பு முதலே அடிப்படை அறிவியலை கற்று தருகிறோம்.
12ம் வகுப்பிற்கு பின்பு மாணவர்கள் பள்ளியை விட்டு சென்றாலும் அவர்கள் சிறப்பாக உயர் கல்வி தொடர்வதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்குகிறோம்.
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அவர்கள் குழந்தைகளை அவர்கள் பயின்ற இப்பள்ளியிலேயே சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாகப் பார்க்கிறோம்.
சிறப்பானது கல்வி
பஞ்சநதம் நடராஜன், துணைவேந்தர், காந்திகிராமம் கிராமிய பல்கலை: கல்வி சேவை உலகில் மற்ற சேவைகளைவிட மிக சிறப்பானது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாழ்வில் உயர நல்ல கல்வியை பெற செய்ய வேண்டும். சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே சிறந்த மாணவர்களையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.
நாம் அறவழியில் சேர்க்கும் செல்வத்தினை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் சேவை செய்ய வேண்டும்.
சாதனை தான் இலக்கு
சர்வேஷ், மாணவர், திண்டுக்கல்: தேசிய அளவிலான தடகள போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் 100 மீ., பிரிவில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளேன். சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில் தென் இந்திய அளவில் நான் மட்டுமே தேர்வாகினேன். எங்கள் பள்ளியில் மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பள்ளி நிர்வாகத்தினர் எப்போதும் ஊக்குவிக்கின்றனர். காலை ஒரு மணி நேரம், மாலை 2 மணி நேரம் பயிற்சி எடுக்கிறேன். தேசிய அளவில் சாதனை செய்வதே எனது இலக்கு.
உற்சாகமாக இருக்கிறது
சங்கர், முன்னாள் மாணவர்: இப்பள்ளியில் முதல் நிலை, சிறப்பு நிலை தேர்வுக்காக திறமைவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி தந்தனர். அதன்மூலம் சவாலான ஐ.ஐ.டி. தேர்விற்கான வழிமுறைகளை கற்பித்தனர். இதன்மூலம் திருப்பதி ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளேன். அதை பாராட்டும் விதமாக தங்க நாணயம் பரிசளித்தார்கள். இது மேலும் உற்சாகம் தருகிறது என்றார்.