/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
/
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
மலை கிராமங்களில் கால்நடைகளை தாக்கும் எறும்புகள் நத்தம் நகரிலும் ஊடுருவலால் மக்கள் அச்சம்
ADDED : ஜன 04, 2024 02:53 AM

நத்தம்: -நத்தம் அருகே கரந்தமலை மலைப்பகுதியை சுற்றிய கிராம பகுதிகளில் கால்நடைகளின் கண்களை தாக்கும் மஞ்சள் பைத்தியம் வகை எறும்புகளால் கிராம மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். தற்போது நத்தம் நகரிலும் ஊடுருவ துவங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நத்தம் கரந்தமலை சுற்றுப்பகுதிகளான வேலாயுதம்பட்டி, உலுப்பகுடி, குட்டூர், சேர்வீடு, அத்திப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் மஞ்சள் பைத்தியம் எறும்புகள் ஆக்கிரமித்துள்ளன. இவ்வகை எறும்புகள் சாதாரண எறும்புகள் போல் இல்லாமல் செந்நிறத்தில் கூட்டமாக திரிகின்றன. மனிதர்களின் உடலில் வேகமாக ஏறுவதால் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படுகிறது.
கால்நடை, விலங்குகளின் கண்களை குறி வைத்து கடிப்பதால் இறக்கின்றன. காட்டு மாடு போன்ற பெரிய வன விலங்குகளையும் இந்த எறும்புகள் விட்டு வைப்பது இல்லை. மழை அடிவார பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் கண்களை தாக்குவதால் பல கால்நடைகள் இறந்துள்ளன. இதனால் மலை அடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் பலர் வீடுகளை காலி செய்து வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து விட்டனர்.
இந்த வினோத வகை எறும்புகள் குறித்து தினமலர் நாளிதழில் 2022 அக்.12ல் செய்தி வெளியானது. அதன் பின் அப்பகுதியில் தொடர்ந்து கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டது.
பெங்களூர் அறிவியல் ஆய்வாளர்கள் எறும்புகளின் மாதிரிகளை எடுத்த சென்று இது மஞ்சள் பைத்தியம் வகை எறும்பு என கண்டறிந்தனர். தினமலர் செய்தி எதிரொலியாக அப்போதைய திண்டுக்கல் கலெக்டர் விசாகன் செப்.7ல் கரந்தமலை பகுதியில் ஆய்வு செய்ததுடன் அப்பகுதி மக்களை சந்தித்து எறும்புகளின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து வனத்துறையினர், கால்நடை பராமரிப்புத் துறை, பூச்சிகள் துறையினர் எறும்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.
இருப்பினும்இந்த எறும்புகளின் தாக்கம், வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து சுற்று கிராமங்களிலும் பரவி வருகிறது. தற்போது இந்த எறும்புகள் நத்தம் நகர் பகுதியை நோக்கியும் படையெடுக்கத் தொடங்கி விட்டன. நத்தம் நகர் ,அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் இந்த வகை எறும்புகளை பார்க்க முடிகிறது.இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கட்டுப்படுத்துவது அவசியம்
சோ.ஆனந்த கிருஷ்ணன், பா.ஜ., ஐ.டி. பிரிவு மாநில துணைத்தலைவர், வேம்பார்பட்டி: கரந்தமலை பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த எறும்புகள் விலங்குகளை தாக்குகின்றன.
தினமலர் நாளிதழில் செய்தி வெளியானபின் அறிவியல் ஆய்வாளர்கள், அதிகாரிகளும் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் இந்த வகை எறும்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த எறும்புகளின் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வினோத எறும்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வேகமாக பரவும் அபாயம்
ஆர். பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கட்சி, கோபால்பட்டி: கரந்தமலை அடிவாரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் மஞ்சள் பைத்தியம் வகை எறும்புகள் தற்போது மழை அடிவார கிராமங்களில் வேகமாக பரவி மக்களுக்கு பெரும் துன்புறுத்தலை தருகிறது.இதன் வேகத்தை பார்த்தால் சில ஆண்டுகளில் மற்ற பகுதியிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்தாமல் விட்டால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியது வரும்.
நத்தம் நகரிலும் ஊடுருவல்
பி. வீரராகவன், மாநிலச் செயலாளர், பா.ஜ., ஊடகப்பிரிவு, நத்தம்: ஆடு,மாடு உள்ளிட்ட பல கால்நடைகள் இறந்து விட்டன.விவசாயிகள் கால்நடை வளர்க்க முடியாமல் விற்பனை செய்துவிட்டு கால்நடை வளர்க்கும் தொழிலையே கைவிட்டு வருகின்றனர்.
மலை அடிவார பகுதியில் வசிக்கும் மக்களும் இந்தஎறும்புகளின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். இந்த எலும்புகள் நத்தம் நகர் பகுதியிலும் ஊடுருவத் தொடங்கியதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.