/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் நிலத்தை முறைகேடாக விற்க முயற்சி குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
கோயில் நிலத்தை முறைகேடாக விற்க முயற்சி குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கோயில் நிலத்தை முறைகேடாக விற்க முயற்சி குறைதீர் கூட்டத்தில் முறையீடு
கோயில் நிலத்தை முறைகேடாக விற்க முயற்சி குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : மே 06, 2025 06:36 AM
திண்டுக்கல்: கோயில் நிலத்தை பட்டா போட்ட தனிநபர்கள், கோயில் பணம் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பான கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 150 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அய்யலுார், மல்லமநாயக்கன்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 68 கிராம மக்கள் சார்பாக அளித்த மனுவில், குஜிலியம்பாறை வடுகம்பாடி, புளியம்பட்டி பகுதியில் பூர்விகமாக வழிபடும் ஸ்ரீபெத்த கோடாங்கி மாலை கோயில் உள்ளது.
கோயிலை சுற்றிய நிலங்கள், அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு குத்தகைக்கு விடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயில் கோயில் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.
குத்தகைக்கு எடுத்தவர்கள் அனுபவ பாத்தியம் செய்து வருவதாக கூறி ராயத்துவரி பட்டாவாக மாற்றிவிட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கோயிலில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள சென்றபோது குத்தகைக்காரர்கள் தங்களது நிலம் என கூறி தகராறு செய்தனர்.
ஆய்வு செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்ய பழநி ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்தனர். இது ஓராண்டாக நிலுவையில் உள்ளது.
இதை பயன்படுத்தி குத்தகைதாரர்கள் நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்கின்றனர். 36 ஏக்கர் நிலத்தை 17 பேரின் பெயருக்கு பதிவு செய்த பட்டாவை ரத்து செய்து, கோயிலுக்கு மாற்றிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கோயில் பணம் முறைகேடு
ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராமரவிக்குமார் அளித்த மனுவில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களிடம் வசூலிக்கப்படும் அர்ச்சனை டிக்கெட், வசூல் டிக்கெட், சிறப்பு தரிசனம், உண்டியல் பணம், பொங்கல் சீட்டு, தீபாராதனை காணிக்கை சீட்டு, பரிவட்டம் கட்டுதல், பால் தயிர் பன்னீர் சீட்டு, கடை ஏலம், நன்கொடை என ரூ.பல லட்சங்கள் வசூலாகி உள்ளது.
ஆனால் கோயில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் உள்ளிட்டோர் பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கால தாமதம் ஏற்படுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.