ADDED : செப் 03, 2026 04:51 PM
வடமதுரை, செப்.4
அய்யலுார் வண்டி கருப்பண சுவாமி கோயில் அருகில் ரோட்டில் தட்டு எடுத்து சேகரிக்கும் காணிக்கைக்கான ஏலம் அறிவித்து ஓராண்டாகியும் ஏலம் போகாமலே உள்ளது.
திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் செல்வோர் அய்யலுார் வண்டி கருப்பண சுவாமி கோயிலுக்கு காணிக்கையாக எறிந்து செல்லும் காசுகள், சிதறு தேங்காய்களை சேகரிக்கவும், வாகனங்கள் பாதுகாப்பு வரி வசூல் செய்யவும் ஹிந்து சமய அறநிலைய துறை ஆண்டுதோறும் ஏலம் விட்டது. இதில் ரோடு பகுதியில் தட்டு மூலம் சேகரிக்கும் காணிக்கைக்கான ஏலம் தர்மகர்த்தா தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது.
கடந்தாண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை ஏல அறிவிப்பில் தட்டு எடுத்து சேகரிக்கும் காணிக்கையும் கூடுதலாக சேர்க்கப்பட்டு ஏல டெபாசிட் ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஏல நடைமுறை கடந்த ஆண்டு துவங்கியபோது எந்த வகையும் ஏலம் போகவில்லை. ஓராண்டாக 4 வகை ஏலமும் அப்படியே உள்ளது. வாகன பாதுகாப்பு வரி வசூல் மட்டும் கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாகவும், மற்றவை உண்டியல் மூலமாகவும் மட்டுமே வருமானமாக பெறப்படுகிறது.
