/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அய்யலுார் வளம்மீட்பு பூங்கா
/
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அய்யலுார் வளம்மீட்பு பூங்கா
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அய்யலுார் வளம்மீட்பு பூங்கா
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அய்யலுார் வளம்மீட்பு பூங்கா
ADDED : ஜன 22, 2025 04:49 AM

நாகரிக வளர்ச்சியில் மக்காத குப்பையின் ஆதிக்கம் அதிகரித்து பூமியை பாழாக்கும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
மனித குலத்தால் தெரு, குப்பை தொட்டிகளில் வீசப்படும் பொருட்களை முறைப்படி மறுசுழற்சிக்கும், மக்க வைக்க நடவடிக்கை எடுக்காமல் பல இடங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் அவலமும் நடக்கிறது.
இதனால் பல்வேறு நோய்கள் மனிதருக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது.
இதுபோன்ற பாதிப்பை உலகிற்கு தராமல் 18 ஆண்டுகளாக திறம்பட திடக்கழிவு மேலாண்மையை கையாண்டு கழிவுகளை பணமாக மாற்றுவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க அய்யலுார் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறது.
இங்குள்ள திருச்சி ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அடுத்த மூங்கில் கரடு அடிவாரத்தில் பேரூராட்சிக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 2006 துவங்கி தற்போதுவரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொய்வின்றி நடக்கிறது.
பேரூராட்சி துாய்மை காவலர்களால் சேகரிக்கப்படும் பல வித குப்பை இங்கு கொண்டு வரப்படுகின்றன. இங்குள்ள ஊழியர்கள் முதலில் மக்கும், மக்காத குப்பை என பிரிக்கின்றனர்.
டீத்துாள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் பொருட்களை, தேவைப்பட்டால் துண்டு, துண்டாக வெட்டி அதற்குரிய தொட்டியில் சானம், நுண்ணுயிர் கரைசல் கலந்து 15 நாட்கள் வைக்கின்றனர்.
அடுத்த 15 நாளுக்கு அடுத்த தொட்டிக்கு மாற்றுகின்றனர். அப்போது கீழ்பாகத்தில் இருப்பவை மேல்பாகத்திற்கு கொண்டு வரப்பட்டு விரைவாக மக்குகின்றன.
ஜல்லடையில் சலித்து மண் புழுக்கள் இருக்கும் தொட்டியில் மக்கிய குப்பை சேர்க்கப்படுகிறது.
அங்கு மண்புழு உரமாக மாறுகிறது. உரம், மக்காத கழிவு பொருள் என அனைத்து விற்கப்பட்டு பேரூராட்சிக்கு வருவாய் தருகிறது.
குப்பையை எரிக்க வேண்டாம்
ஆர்.கருப்பன், பேரூராட்சி தலைவர், அய்யலுார்: மக்கும், மக்காத குப்பையை தீயிட்டு கொளுத்தாமல் பேரூராட்சி துாய்மை காவலர்களிடம் சேர்க்க வேண்டும்.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அய்யலுார் பேரூராட்சியின் வளம்மீட்பு பூங்காவின் சுற்றுச்சூழல் காக்கும் பணி சிறப்பாக தொடர கவனம் செலுத்துகிறோம்.
தற்போது வரை வீடுகளிலிருந்து கழிப்பறை தொட்டி கழிவுகளை எடுத்து வரும் தனியார் வாகனங்கள் ஆங்காங்கே ரோட்டோரம், குளங்களில் யாருக்கும் தெரியாமல் திறந்துவிட்டு செல்லும் நிலை உள்ளது.
இதற்கும் ஒரு நல்ல தீர்வாக இத்தகைய கழிவுகளை சேகரித்து இயற்கை உரமாக மாற்றும் திட்டம் அரசிடம் உள்ளது.
இதற்கான இடத்தினை தேர்வு செய்வதில் சில நடைமுறை சிக்கல் உள்ளது.
மக்கள் ஆதரவுடன் இடம் தேர்வானதும் இத்தகைய கழிவுகளும் உரமாக்கப்படும். கண்ட இடங்களில் கழிப்பறை கழிவுகள் கொட்டப்படும் நிலை மாறும்.