கண்மாய் வரத்து கால்வாய்களை துார்வாருவது அவசியம்! மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்
கண்மாய் வரத்து கால்வாய்களை துார்வாருவது அவசியம்! மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்
UPDATED : செப் 28, 2026 04:05 PM
ADDED : செப் 28, 2026 04:02 PM
நிலக்கோட்டை:வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக கண்மாய் வரத்து வாய்க்கால்களை துார்வாரி நீர்வரத்திற்கு இடையூறு இல்லாத நிலை ஏற்படுத்த பொதுப்பணித் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கை கொடுக்காத நிலையில் எல் நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுக்கும் என வானிலை ஆராய்ச்சி மையங்கள், தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், பழநி மலைத்தொடர்களிலும் மழைப்பொழிவு இருக்கும் எனக்கூறி வருகின்றனர். பழநி மலைத்தொடரை சுற்றிலும் மஞ்சளாறு, மருதாநதி, காமராஜர் நீர்த்தேக்கம், பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி, குடகனாறு ஆகிய அணைகள் உள்ளன.
இந்த அணைகளில் இருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் வரத்து கால்வாய்கள், கிளை வாய்க்கால்கள் இருக்கின்றன. இந்த கால்வாய்கள் தண்ணீர் செல்லாத காரணத்தால் துார்ந்து போய் உள்ளன. நகர்புறங்களை ஒட்டியுள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி நீர்வழிப்பாதை அடைத்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் வரத்துக் கால்வாய்களை துார்வாரினால் மட்டுமே கண்மாய்களுக்கு தண்ணீர் முழுவதுமாக சென்றடையும். பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் வழிப்பாதை அடைபட்டு கால்வாய்களின் கரைகள் உடைய நேரிடும்.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறையினருக்கு சொந்தமான கண்மாய்கள் உள்ளன. அவற்றில் புதர்கள் மண்டியுள்ள கண்மாய்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள வரத்து கால்வாய்களை கண்டறிந்து பருவ மழைக்கு முன்பாக துார்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் கூறுகையில், 'கொங்கர்குளம் கண்மாய் வரத்து வாய்க்காலில் புதர்கள் மண்டி உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டு மேடாக காட்சியளிக்கிறது. வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து ஏற்பட்டால் கண்மாய்க்குள் தண்ணீர் செல்வது கடினம். எனவே பொதுப்பணித்துறையினர் கண்மாய் வரத்து வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு சம்பந்தமான கால்வாய், கன்மாய்களையும் துார்வாரிட வேண்டும்' என்றனர்.
