தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் செந்துறை மக்கள்

 அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் செந்துறை மக்கள்

 அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் செந்துறை மக்கள்


ADDED : ஆக 13, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செந்துறை: செந்துறை ஊராட்சியில் சேதமடைந்த ரோடுகள்; தொலைத்தொடர்பு வசதி இல்லாமல் பின்தங்கிய நிலை; கடைக்கோடி கிராமம் என்பதால் அரசின் வளர்ச்சி திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் என மக்கள் தவித்து வருகின்றனர்.

நத்தம் ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் மாமரத்துப்பட்டி, மங்கலப்பட்டி, நல்லபிச்சம்பட்டி, தட்டாமடை, கோட்டப்பட்டி, சரளப்பட்டி, கவுண்டம்பட்டி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக செந்துறையில் இருந்து நல்லபிச்சம்பட்டி, தட்டாமடை செல்லும் ரோடு, செந்துறை- மங்கலப்பட்டி ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன. இவ்வழியாக பயணிக்கும் கிராம மக்கள் தினசரி பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் விபத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. நல்லபிச்சம்பட்டியில் அலைபேசி டவர் இல்லாததால் இணையதள வசதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பின்தங்கிய நிலை நாகராஜ், தலைவர், செந்துறை முன்னேற்ற குழு: செந்துறை ஊராட்சியில் நல்லபிச்சம்பட்டி, மங்கலப்பட்டி, தட்டாமடை, கோட்டப்பட்டி, கவுண்டம்பட்டி, சரளப்பட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அலைபேசி டவர் இல்லாததால் இணையதள வசதியை பயன்படுத்த முடியவில்லை. இங்குள்ள 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. 3 கி.மீ.,க்கு அப்பால் உள்ள செந்துறை சென்று படிப்பதால் மாணவர்கள் பாதிக்கின்றனர். இணைய வசதி கிடைக்காததால் படிப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அலைபேசி டவர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனித்தீவான கிராமங்கள் யோசுவா, சமூக ஆர்வலர், நல்லபிச்சம்பட்டி: விவசாயம், கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள இப்பகுதியில் தகவல் தொடர்பு இன்றி பால், விவசாய பொருட்களை விற்க பலர் நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ அவசரத்துக்கும் இதே நிலை தான். இக்குறைபாடால் பிற கிராமத்தினர் இங்கு பெண் கொடுக்கவே தயங்குகின்றனர். தனித்தீவாக துண்டிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் அலைபேசி டவர் அமைத்து மேம்படுத்த வேண்டும். மங்கலப்பட்டி செல்லும் ரோடு மிகவும் சேதமடைந்து உள்ளது. இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளதால் அது ரோட்டை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

அடிப்படை வசதிகள் இல்லை மார்ட்டின் ஜீவா, விவசாயி, நல்லபிச்சம்பட்டி: செந்துறையில் இருந்து நல்லபிச்சம்பட்டி செல்லும் ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது.

தற்போது மழை பெய்துள்ளதால் ரோட்டில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மாவட்டத்தின் கடைசி எல்லையில் எங்கள் கிராமங்கள் உள்ளதால் அரசு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் எதுவும் கிடைப்பதில்லை. ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us